ட்ரம்பின் அரசியல் துருப்புச் சீட்டா? மெலனியா ட்ரம்ப் ஆவணப் படம்
அமெரிக்காவின் முதல் பெண்மணியான மெலனியா ட்ரம்ப் குறித்து உருவாக்கப்பட்ட ஆவணப்படம் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. உலக அளவில் மிகப் பெரிய தொகைக்கு விற்பனை செய்யப்பட்ட இந்த ஆவணப்படம், எதிர்பார்த்த அளவிலான பார்வையாளர்களின் ஆதரவைப் பெறவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரானுடன் போர் பதற்றம், பல நாடுகளுடன் வர்த்தக முரண்பாடுகள், உள்நாட்டில் பொருளாதார நிலைமை குறித்த குழப்பம் போன்ற சூழ்நிலைகளுக்கிடையே, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தனது மனைவி மெலனியாவை மையமாகக் கொண்ட இந்த ஆவணப்படத்தின் பிரத்யேக முதல் காட்சியை வெள்ளை மாளிகையில் தனிப்பட்ட முறையில் பார்த்துள்ளார்.
இந்த ஆவணப்படம் அமெரிக்காவில் மட்டும் சுமார் 1,500 திரையரங்குகளிலும், உலகின் 27 நாடுகளில் 2,000-க்கும் அதிகமான திரையரங்குகளிலும் வெளியிடப்பட்டுள்ளது.
‘ரஷ் ஹவர்’ திரைப்படத் தொடரின் மூலம் பிரபலமான இயக்குநர் பிரட் ராட்னர் இந்த படத்தை இயக்கியுள்ளார். இவர் 2017ஆம் ஆண்டு MeToo இயக்கத்தின் போது பாலியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த ஆவணப்படத்தின் ஒளிபரப்பு உரிமையை அமேசான் நிறுவனம் 40 மில்லியன் டாலர்களுக்கு வாங்கியுள்ளது. மேலும் விளம்பர நடவடிக்கைகளுக்காக 35 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது இதுவரை எந்த ஆவணப்படத்திற்கும் வழங்கப்பட்ட மிகப்பெரிய தொகை என கூறப்படுகிறது. இந்திய மதிப்பில் இது சுமார் 700 கோடி ரூபாய் ஆகும்.
இந்த படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளராக மெலனியா ட்ரம்ப் பணியாற்றியுள்ள நிலையில், மொத்த ஸ்ட்ரீமிங் உரிமை வருவாயில் 70 சதவீத பங்கை அவர் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2024 அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னரே இந்த ஆவணப்படம் குறித்த யோசனை உருவானதாக மெலனியா தெரிவித்துள்ளார். முதல் பெண்மணியின் பார்வையில், பதவியேற்புக்கு முந்தைய சில நாட்களை மக்களுக்கு காட்டும் வாய்ப்பாக இதை உருவாக்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.
இரண்டாவது முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, ட்ரம்ப் – மெலனியா தம்பதியினர் மீண்டும் வெள்ளை மாளிகைக்கு திரும்பும் தருணங்கள், அதோடு பதவியேற்புக்கு முன்பான 20 நாட்களின் நிகழ்வுகள் இந்த ஆவணப்படத்தில் இடம் பெற்றுள்ளன.
ஒரு மனைவியாகவும் தாயாகவும் இருக்கும் முன்னாள் மாடல் மெலனியா, தனது கணவரை மீண்டும் அதிபராக்கிய பின்னணி, குடும்பத்தை மீண்டும் வெள்ளை மாளிகைக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பை அவர் எவ்வாறு நிறைவேற்றினார் என்பதே இந்த படத்தின் மையக் கருத்தாக அமைந்துள்ளது.
பதவியேற்பு விழாவுக்கான திட்டமிடல், குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளும் உணர்ச்சிப்பூர்வமான தருணங்கள், மெலனியாவின் அன்றாட பழக்கங்கள், ஆடைத் தேர்வுகள் மற்றும் இராஜதந்திர செயல்பாடுகள் போன்ற பல அம்சங்களும் இதில் விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
சுமார் இரண்டு மணி நேரம் ஓடும் இந்த ஆவணப்படத்தில், கேபிடல் கட்டிடத்தின் முன் நின்று கேமராவை நோக்கி
“நாங்கள் மீண்டும் இங்கு வந்துவிட்டோம்”
என்று மெலனியா கூறும் காட்சியும் இடம்பெற்றுள்ளது.
பிரமாண்டமான தயாரிப்பு, அழகிய காட்சிகள் மற்றும் அமெரிக்காவின் முதல் பெண்மணியை மையமாகக் கொண்ட கதையமைப்பு இருந்தும், இந்த ஆவணப்படம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெறவில்லை என கூறப்படுகிறது.
வட அமெரிக்காவில் வெளியான முதல் வார இறுதியில், வசூல் 1 மில்லியன் முதல் 5 மில்லியன் டாலர் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனின் முக்கிய திரையரங்கு சங்கிலியான Vue Cinema-வின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் ரிச்சர்ட்ஸ், இந்த படத்திற்கு பார்வையாளர்களிடையே ஆர்வம் இல்லை என தெரிவித்துள்ளார்.
லண்டனின் இஸ்லிங்டன் பகுதியில் நடைபெற்ற முதல் காட்சிக்கு ஒரே ஒரு டிக்கெட் மட்டுமே விற்கப்பட்டதாகவும், அதே நாளில் மாலை 6 மணிக் காட்சிக்கு இரண்டு டிக்கெட்டுகள் மட்டுமே முன்பதிவு செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல், பிரிட்டனின் பிளாக்பர்ன், காசல்ஃபோர்ட், ஹாமில்டன் உள்ளிட்ட நகரங்களில் திட்டமிடப்பட்ட 28 காட்சிகளுக்கும் ஒரு டிக்கெட் கூட விற்கப்படவில்லை என கூறப்படுகிறது.
மேலும், இந்த படத்தின் தயாரிப்பு குழுவில் பணியாற்றியவர்களில் மூன்றில் இரண்டு பங்கு ஊழியர்கள், தங்களது பெயர்களை படத்தின் டைட்டில் கார்டில் இருந்து நீக்குமாறு கேட்டுக் கொண்டதாக Rolling Stone இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அரசியல் படம் அல்ல என தயாரிப்பாளர்கள் கூறினாலும், இதில் அரசியல் பிரச்சாரத் தன்மை தென்படுவதாக விமர்சனங்களும் எழுந்துள்ளன.