சீனா – அமெரிக்காவுக்கு இணையான சக்தியாக இந்தியாவின் 5-ம் தலைமுறை ‘பிரசண்ட்’ ஹெலிகாப்டர்கள்
இந்தியா உருவாக்கி வரும் 5-ம் தலைமுறை தாக்குதல் திறன் கொண்ட LCH ‘பிரசண்ட்’ (PRACHAND) ஹெலிகாப்டர்கள், கடுமையான ஹிமாலய சூழ்நிலைகளில் செயல்படும் திறனில் சீனா மற்றும் அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளுக்கே சவால் விடும் அளவிற்கு முன்னேறியுள்ளன.
முழுமையாக இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்படும் இந்த புதிய தலைமுறை தாக்குதல் ஹெலிகாப்டர்கள், 2027 முதல் 2028 ஆம் ஆண்டுக்குள் இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனம் உள்நாட்டிலேயே தயாரிக்கும் இந்த ஹெலிகாப்டர்கள், குறைந்த செலவில் மிக உயர்ந்த தொழில்நுட்ப திறன் கொண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
5,000 மீட்டருக்கும் அதிக உயரத்தில் பறக்கும் திறன் கொண்ட இந்த ஹெலிகாப்டர்கள், பனிப்பொழிவு, கடும் குளிர் மற்றும் மலைப்பகுதி சூழல்களில் சிறப்பாக செயல்படுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. Air-to-Air, Air-to-Ground ஏவுகணைகள், ராக்கெட்டுகள் மற்றும் தானியங்கி துப்பாக்கிகள் பொருத்தப்பட்டுள்ள இவை, எதிரி இலக்குகளை துல்லியமாக தாக்கும் வல்லமை பெற்றதாகும்.
மேலும், Electro-Optical சென்சார்கள், Helmet Mounted Display System போன்ற நவீன கருவிகள் இணைக்கப்பட்டுள்ளதால், போர்க்களத்தில் விமானிகளை அதிக துல்லியத்துடனும் வேகத்துடனும் செயல்படச் செய்கின்றன.
சுமார் 62,700 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தின் கீழ், மொத்தம் 156 LCH பிரசண்ட் ஹெலிகாப்டர்கள் நாட்டுக்குள் தயாரிக்கப்பட உள்ளன. இதன் மூலம் உள்நாட்டு தொழிற்துறை, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பெரிதும் பயனடைவதுடன், ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் கூறப்படுகிறது.
பாதுகாப்புத் துறையினர் தெரிவிப்பதாவது, இந்த ‘பிரசண்ட்’ ஹெலிகாப்டர்கள் மூலம், சீனா மற்றும் அமெரிக்கா பயன்படுத்தும் முன்னணி தாக்குதல் ஹெலிகாப்டர்களுக்கு இணையான சக்தி இந்திய ராணுவத்துக்கும் கிடைக்கும். குறிப்பாக, உயரமான எல்லைப் பகுதிகளில் தாக்குதல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் இதன் மூலம் மேலும் பலப்படுத்தப்படும் என வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே, இந்த திட்டம் “ஆத்மநிர்பர் பாரத்” கொள்கையின் முக்கிய முன்மாதிரியாக கருதப்படுவதுடன், இந்தியாவின் பாதுகாப்புத் தன்னிறைவை வலுப்படுத்தும் ஒரு முக்கிய மைல்கல்லாகவும் பார்க்கப்படுகிறது. விரைவில் சேவைக்கு வரவுள்ள இந்த LCH ‘பிரசண்ட்’ ஹெலிகாப்டர்கள், இந்திய ராணுவத்துக்கும் விமானப்படைக்கும் புதிய சக்தியாக அமையும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.