ரஷ்ய நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடைவிதிப்பு: ரிலையன்ஸ் கச்சா எண்ணெய் இறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்பு
ரஷ்யாவின் இரண்டு பெரிய எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது, இதனால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
ரஷ்யா-உக்ரைன் போரு மூன்று ஆண்டுகளாக தொடர்கிறது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் முயற்சி செய்தும், இந்த போரை நிறுத்த முடியவில்லை. இதையடுத்து, அமெரிக்க கருவூலத் துறை வெளிநாட்டு சொத்து கட்டுப்பாட்டு அலுவலகம் (OFAC), ரஷ்யாவின் முக்கிய எண்ணெய் நிறுவனங்கள் ரோஸ்நெப்ட் மற்றும் லூகாயில் மீது தடைவிதித்துள்ளது. ட்ரம்ப் நிர்வாகம் இந்த நிறுவனங்கள் உக்ரைன் மீது தாக்குதலுக்கு நிதி வழங்குவதாக குற்றச்சாட்டியுள்ளார்.
இந்த இரண்டு நிறுவனங்களும் சேர்ந்து ஒரு நாளைக்கு 3.1 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்கின்றன. குறிப்பாக, ரோஸ்நெப்ட் உலகளாவிய ரஷ்ய எண்ணெய் உற்பத்தியில் 50% மற்றும் உலக அளவில் 6% பங்கு பெற்றுள்ளது.
2022-ம் ஆண்டு உக்ரைனுக்கு எதிரான தாக்குதலைத் தொடங்கிய பின்னர், மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்தியுள்ளன. இதேநேரம், அதிக தள்ளுபடிகளை பயன்படுத்தி இந்தியா ரஷ்யாவிடமிருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது.
இந்த எண்ணெய் இந்திய தனியார் நிறுவனங்கள், குறிப்பாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ரோஸ்நெப்ட் நயாரா எனர்ஜி, வாங்கி வருகின்றன. இதனால், அமெரிக்க தடைவிதிப்பு காரணமாக இந்த இரு நிறுவனங்களின் கச்சா எண்ணெய் இறக்குமதி கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
அதேநேரம், மத்திய அரசுக்கு சொந்தமான சுத்திகரிப்பு நிறுவனங்கள்—இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC), பாரத் பெட்ரோலியம் (BPCL), இந்துஸ்தான் பெட்ரோலியம் (HPCL), மங்களூர் சுத்திகரிப்பு-பெட்ரோகெமிக்கல்ஸ், HPCL-மிட்டல் எனர்ஜி (HMEL)—ரஷ்யாவின் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்கின்றன. ஆனால், இந்த அரசு நிறுவனங்கள் ரோஸ்நெப்ட் அல்லது லூகாயிலுடன் எந்த ஒப்பந்தத்தையும் கொண்டிருக்கவில்லை.