மகாராஷ்டிர துணை முதல்வர் பதவிக்கு சுனேத்ரா பவார்? – அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு!
மகாராஷ்டிர மாநிலத்தின் புதிய துணை முதல்வராக, மறைந்த அஜித் பவாரின் மனைவியான சுனேத்ரா பவார் இன்று பொறுப்பேற்க உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 28-ஆம் தேதி, துணை முதல்வர் அஜித் பவார் பயணித்த சிறிய விமானம் விபத்துக்குள்ளானதில், அவர், அவரது பாதுகாப்பு அதிகாரி, விமானி உள்ளிட்ட ஐந்து பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் மாநில அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், அஜித் பவார் வகித்த பதவிகள் தங்களுக்கே வழங்கப்பட வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கூட்டணி தலைவர்கள், முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸை நேரில் சந்தித்து வலியுறுத்தினர். அதேசமயம், அந்த பதவிக்கு சுனேத்ரா பவாரின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டது.
இதற்கு முதலமைச்சர் பட்னாவிஸ் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, இன்று மாலை 5 மணியளவில் சுனேத்ரா பவார் மகாராஷ்டிர துணை முதல்வராக பதவியேற்க உள்ளதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், அவருக்கு கலால் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சுப் பொறுப்புகள் வழங்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.