விமான விபத்தில் பலியான பணிப்பெண் பிங்கியின் கடைசி அழைப்பு – துயரில் தந்தை
மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் உள்ளிட்ட ஐந்து பேரின் உயிரைப் பறித்த விமான விபத்தில், பணிப்பெண்ணாக பணியாற்றிய பிங்கி மாலியும் உயிரிழந்தார். விபத்து நடைபெறுவதற்கு முன்பு அவர் தனது தந்தையுடன் பேசிய இறுதி உரையாடல் தற்போது வெளியாகி பலரின் கண்களை ஈரமாக்கியுள்ளது.
விபத்துக்கு சற்றுமுன் தந்தையை தொடர்புகொண்ட பிங்கி மாலி, துணை முதல்வருடன் பாராமதிக்கு பயணம் செய்வதாகவும், அவரை அங்கு இறக்கிவிட்ட பின் நாந்தேடுக்கு சென்றடைந்ததும் மறுநாள் விரிவாக பேசுவதாகவும் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். மகளின் வார்த்தைகளை கேட்டு சம்மதம் தெரிவித்த தந்தை, பின்னர் அழைப்பை முடித்துள்ளார்.
ஆனால் அந்த “நாளை” இனி வரப்போவதில்லை என்பதை அறியாமல் அவர் இணைப்பை துண்டித்தார். தற்போது மகளை இழந்த தந்தை துயரத்தில் மூழ்கியுள்ளார். இது குறித்து பேசிய அவர், விபத்துக்கு காரணமான தொழில்நுட்ப விவரங்கள் தனக்கு புரியவில்லை என்றும், ஆனால் தனது வாழ்க்கையே சிதைந்துவிட்டதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்தார்.
மேலும், தனது மகளின் உடலை தங்களிடம் ஒப்படைத்தால், இறுதி சடங்குகளை மரியாதையுடன் நடத்த விரும்புவதாக அவர் கூறிய வார்த்தைகள், கேட்ட அனைவரையும் உருக்கின.