சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் தலைமைக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்நிலை குழு ஆதரவு
சீனாவில் எதிர்க்கட்சிகள் இல்லாத அரசியல் அமைப்பு காரணமாக, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஜி ஜின்பிங் 2013-ம் ஆண்டில் அதிபராக பதவியேற்றார். 2023-ம் ஆண்டில் மூன்றாவது முறையாக அதிபராகத் தேர்வு செய்யப்பட்டு, தற்போது பதவியில் தொடர்கிறார்.
அவரது தலைமைக்கு எதிராக, சில மூத்த கட்சி நிர்வாகிகள் மற்றும் ராணுவ தலைவர்கள் போர்க்கொடி ஏற்றி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால் பல முக்கிய தலைவர்கள் மாயமாகி உள்ளனர். குறிப்பாக, கட்சியின் மூன்றாவது மிகப்பெரிய தலைவர் ஹீ வெய்டோங் கடந்த மார்ச் மாதம் இருந்து காணாமல் போயுள்ளர்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி, நாட்டின் உயர்நிலை குழுவாக கருதப்படுகிறது. இது ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் பெய்ஜிங்கில் கூட்டம் நடத்துவது வழக்கம். கடந்த 20-ம் தேதி, அதிபர் ஜி ஜின்பிங் தலைமையில் மத்திய கமிட்டி கூட்டம் பெய்ஜிங்கில் தொடங்கியது. இதில் 350 உறுப்பினர்கள் பங்கேற்றனர். மூன்று நாட்கள் நடந்த கூட்டம் நேற்று நிறைவடைந்தது.
மத்திய கமிட்டி வெளியிட்ட அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
- கட்சி, ஆட்சி நிர்வாகம் மற்றும் ராணுவத்தில் முக்கிய பதவிகளில் இருந்த 9 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
- குறிப்பாக, ஹீ வெய்டோங்கின் பதவி நீக்கத்துக்கான ஒப்புதல் மத்திய கமிட்டி கூட்டத்தில் வழங்கப்பட்டது.
- அவருக்கு பதிலாக, ராணுவத்தின் ஊழல் தடுப்பு துறை தலைவர் ஜாங் ஷெங்மின் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் மத்திய ராணுவ கமிஷனின் துணைத் தலைவர் பதவியையும் வகிப்பார்.
- கூட்டத்தில் அதிபர் ஜி ஜின்பிங்கின் தலைமைக்கு ஒருமனதான ஆதரவு வழங்கப்பட்டு, அடுத்த 5 ஆண்டுக்கான திட்டங்களுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது.
- இதன் மூலம், சுயசார்பு சீனா திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று அறிக்கை குறிப்பிட்டுள்ளது.