இந்தியாவின் ராஜதந்திர முன்னேற்றம் – தனிமைப்படுத்தப்படும் அமெரிக்கா! | சிறப்பு அலசல்
உலக வர்த்தக வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் இந்தியா – ஐரோப்பிய யூனியன் தடையற்ற வர்த்தக உடன்பாடு, சர்வதேச அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. குறிப்பாக, இந்த ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இதுவரை தன்னுடைய உள்நாட்டு சந்தையை முழுமையாக வெளிநாடுகளுக்கு திறக்காமல், தற்காப்பு அணுகுமுறையையே இந்தியா பின்பற்றி வந்தது. ஆனால், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் பொறுப்பேற்புக்குப் பிறகு, இந்தியாவின் வர்த்தகக் கொள்கையில் கணிசமான மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவின் வெளிநாட்டு கொள்கையை வர்த்தக மோதல்களாக மாற்றியமைத்தார். பல்வேறு நாடுகளுக்கு எதிராக கடும் வரிகளை விதித்த அவர், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதாக கூறி, இந்தியா மீது 50 சதவீத இறக்குமதி வரியை விதித்தார்.
இதன் விளைவாக, அமெரிக்காவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 50 சதவீதத்திற்கும் மேலாக சரியலாம் என்றும், சுமார் 41 பில்லியன் டாலர் அளவிலான வர்த்தக லாபம் பாதிக்கப்படும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
இந்தச் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அமெரிக்காவை அதிகமாக சார்ந்திருப்பதை குறைப்பதற்காகவும், புதிய வர்த்தக பாதைகளை உருவாக்குவதற்காகவும், இந்தியா பல நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.
அதன் முக்கிய அடையாளமாக, சமீபத்தில் இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையே கையெழுத்தான தடையற்ற வர்த்தக உடன்பாடு கருதப்படுகிறது. இது, அமெரிக்காவுக்கு வழங்கப்பட்ட மறைமுக அரசியல் செய்தியாகவும் பார்க்கப்படுகிறது.
முன்னதாக, ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கியதற்காக இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா வரி விதித்தபோது, ஐரோப்பிய நாடுகள் அதனை ஆதரிக்க மறுத்தன. மேலும், இந்தியாவுடன் பெரிய வர்த்தக உடன்பாடு செய்தால், அது உக்ரைன் போர் சூழலில் ரஷ்யாவுக்கு ஐரோப்பா ஆதரவளிப்பதற்குச் சமம் என்று அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசன்ட் விமர்சனம் செய்திருந்தார்.
உண்மையில், 18 ஆண்டுகளுக்கும் மேலாக பேச்சுவார்த்தை நிலுவையில் இருந்த இந்தியா – ஐரோப்பிய யூனியன் வர்த்தக ஒப்பந்தம், ட்ரம்பின் கடுமையான வரிக் கொள்கைகளால் தான் இறுதி வடிவம் பெற்றதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
அமெரிக்கா மற்றும் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் இன்றைய சிக்கலான உலக அரசியல் சூழலில், நடுத்தர சக்தி கொண்ட நாடுகளும் தங்கள் சுயாதீனத்தை நிலைநாட்ட முடியும் என்பதை இந்தியா இந்த ஒப்பந்தம் மூலம் நிரூபித்துள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக, வரி மிரட்டல்களால் பிற நாடுகளை அமெரிக்கா இனி எளிதில் கட்டுப்படுத்த முடியாது என்றும் பொருளாதார ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பிய யூனியனுடன் இந்தியா மேற்கொண்டுள்ள இந்த உடன்பாடு, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், வெளிநாட்டு அரசியல் உத்திகளுக்கும் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்துள்ளது. இனி, ஐரோப்பிய சந்தைகளில் அமெரிக்காவை விட இந்தியாவின் பங்கு அதிகரிக்கும் சூழல் உருவாகும் என கணிக்கப்படுகிறது.
இதற்கு முன்னதாக, கடந்த மே மாதம் பிரிட்டனுடனும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நியூசிலாந்துடனும் இந்தியா தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது. அதே காலகட்டத்தில் ஓமனுடனும் இந்தியா ஒரு முக்கிய வர்த்தக உடன்பாட்டை உருவாக்கியுள்ளது.
வருகிற பிப்ரவரி மாதம், பிரேசில் அதிபர் லூலா டா சில்வா இந்தியாவுக்கு வருகை தரும் போது, இரு நாடுகளுக்கும் இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் கனடா பிரதமர் மார்க் கார்னி இந்தியாவுடன் வர்த்தக உடன்பாடு மேற்கொள்ளலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்வாறு, சர்வதேச வர்த்தகமும், ராஜதந்திர அரசியலும் புதிய திசை நோக்கி நகரும் நிலையில், உலக அரங்கில் தனிமைப்படுத்தப்படும் அமெரிக்கா இதற்கு அரசியல் ரீதியாக எவ்வாறு பதிலளிக்கும் என்பதே தற்போது எழுந்துள்ள முக்கிய கேள்வியாக உள்ளது.