சுதேசி சிந்தனைக்கு முதன்மை அளித்த தலைவர் மகாத்மா காந்தி
மகாத்மா காந்தி வலியுறுத்திய சுதேசி சிந்தனையே, வளர்ச்சியடைந்ததும் தன்னிறைவு பெற்றதுமான இந்தியாவை உருவாக்கும் அடித்தளமாக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மகாத்மா காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு, தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ள பிரதமர் மோடி, தேசத் தந்தையின் நினைவுநாளில் அவருக்கு பணிவான மரியாதையை செலுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.
காந்தி தனது வாழ்நாளெங்கும் சுதேசி கொள்கைக்கு பெரும் முக்கியத்துவம் அளித்தவர் என்றும், அந்தக் கொள்கையே இந்தியா தன்னம்பிக்கையுடன் முன்னேறுவதற்கான அடிப்படை ஆதாரமாக விளங்குகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மகாத்மா காந்தியின் வாழ்க்கை முறையும், அவர் மேற்கொண்ட செயல்பாடுகளும் இன்றும் மக்களை கடமை உணர்வோடு செயல்பட ஊக்குவித்து வருவதாக பிரதமர் மோடி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வெளியிட்டுள்ள தனிப்பட்ட பதிவில், அகிம்சை, நேர்மை மற்றும் அறநெறியை ஆயுதங்களாகக் கொண்டு இந்திய சுதந்திரப் போராட்டத்தை வழிநடத்திய மகாத்மா காந்தியை நினைவுகூர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அமைதி, பொறுமை, ஒற்றுமை மற்றும் கலாச்சார மரபுகளை பாதுகாப்பது போன்ற உயரிய மதிப்புகளை போதித்த காந்தியின் தியாகங்களை மதித்து வணங்குவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், மகாத்மா காந்தியின் உயரிய கொள்கைகளை வாழ்க்கையில் பின்பற்றி, அவரது புகழை மேலும் உயர்த்துவதே உண்மையான அஞ்சலி என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.