தன்னம்பிக்கையும் தேசபக்தியும் கொண்ட இளைஞர்களை உருவாக்கும் NCC – பிரதமர் மோடி
தேசிய மாணவர் படை (NCC), இந்திய இளைஞர்களை ஒழுக்கம், தன்னம்பிக்கை மற்றும் தேசப்பற்று கொண்ட குடிமக்களாக வடிவமைக்கும் முக்கிய இயக்கமாக செயல்படுகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தேசிய மாணவர் படையின் குடியரசு தின சிறப்பு முகாமின் ஒரு அங்கமாக, டெல்லியில் உள்ள கரியப்பா அணிவகுப்பு மைதானத்தில் மிகப் பெரும் அளவில் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, திறந்த வாகனத்தில் வந்து NCC மாணவர்களின் மரியாதை அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, இசைக்கருவிகளின் முழக்கத்துடன் NCC மாணவர்கள் ஒழுங்கான அணிவகுப்பாக முன்னேறினர். பின்னர், பிரதமர் மோடி NCC மாணவர்களுடன் சில நேரம் உரையாடி அவர்களை ஊக்குவித்தார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், NCC என்பது இந்தியாவின் இளம் தலைமுறையை தன்னம்பிக்கை நிறைந்தவர்களாகவும், கட்டுப்பாடு கொண்டவர்களாகவும், நாட்டின் மீது ஆழ்ந்த பற்றுள்ளவர்களாகவும் உருவாக்கும் அமைப்பாக திகழ்கிறது எனக் குறிப்பிட்டார்.
இன்றைய சர்வதேச சூழலில், உலக நாடுகள் இந்திய இளைஞர்களை மிகுந்த எதிர்பார்ப்புடன் கவனித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இடையே உருவானுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், இளைஞர்களுக்கு பெருமளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் பிரதமர் கூறினார்.
மேலும், இந்திய ஆயுதப்படைகளின் வீரத்தையும், நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நவீன ஆயுதத் தொழில்நுட்பத்தின் திறனையும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளதாக கூறிய பிரதமர், “வளர்ந்த இந்தியா” என்பது பொருளாதார முன்னேற்றம் மட்டுமல்ல; குடிமக்களின் பொறுப்புணர்வும் அதில் அடங்கும் என வலியுறுத்தினார்.