உலக அதிகார அரசியலுக்கு மாற்றுப் பதில் : இந்தியா – ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தத்தை பாராட்டிய கனடா

Date:

உலக அதிகார அரசியலுக்கு மாற்றுப் பதில் : இந்தியா – ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தத்தை பாராட்டிய கனடா

இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த நாடுகளுக்கிடையே உருவான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், உலக அரசியல் மற்றும் பொருளாதார அரங்கில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, அமெரிக்காவை அசௌகரியத்தில் ஆழ்த்தியுள்ள இந்த ஒப்பந்தம், அந்த நாட்டின் வர்த்தக அழுத்தங்களுக்கு உரிய பதிலடி என கனடா வெளிப்படையாக வரவேற்றுள்ளது.

பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், ஆஸ்திரியா, பெல்ஜியம், பின்லாந்து, நெதர்லாந்து, டென்மார்க் உள்ளிட்ட 27 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய ஒன்றியத்துடன், இந்தியா தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளது. இது உலகளாவிய வர்த்தகத்தில் முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.

இந்தியா – ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக பேச்சுவார்த்தைகள் 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன. ஆனால், பல்வேறு அரசியல் மற்றும் பொருளாதார காரணங்களால் 2013ஆம் ஆண்டு அவை நிறுத்தப்பட்டன. பின்னர், அமெரிக்காவுடன் ஏற்பட்ட வர்த்தக மோதல்களின் பின்னணியில், 2022ஆம் ஆண்டில் மீண்டும் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கிய இந்தியா, நீண்ட கால முயற்சிக்குப் பிறகு இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவு செய்துள்ளது.

இந்த ஒப்பந்தம், இந்தியா – ஐரோப்பிய ஒன்றிய உறவுகளில் ஒரு வரலாற்றுச் சாதனையாக கருதப்படுகிறது. உலகளாவிய அரசியல் பதற்றங்கள், பொருளாதார மந்தநிலை போன்ற சவால்கள் நிலவிய சூழலில், உலகின் இரண்டாவது மற்றும் நான்காவது பெரிய பொருளாதார சக்திகளுக்கிடையே உருவாகியுள்ள இந்த உடன்பாடு, இருதரப்பு அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என ஐரோப்பிய ஒன்றியம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதாகக் கூறி இந்தியாவுக்கு 50 சதவீத வரி விதித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கிரீன்லாந்து தொடர்பான விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவித்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் கூடுதல் வரி விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால், அந்த அச்சுறுத்தல்களுக்கு செவி சாய்க்காத ஐரோப்பிய ஒன்றியம், இந்தியாவுடன் வர்த்தக ஒத்துழைப்பை வலுப்படுத்தி, அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு எதிரான திடமான பதிலடியை வழங்கியுள்ளது.

சுமார் 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவும், 50 கோடி மக்களை உள்ளடக்கிய ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து, உலக பொருளாதாரத்தில் சுமார் 25 சதவீத பங்கைக் கொண்டுள்ளன. உலகளாவிய வர்த்தகத்தில் இவ்விரு தரப்புகளின் பங்களிப்பு மட்டும் 12 சதவீதமாக உள்ளது.

இருபது ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த ஒப்பந்தம், வரியை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தி வரும் அமெரிக்காவுக்கு ஒரு அதிர்ச்சியாக அமைந்துள்ளதுடன், உலக வர்த்தக சமநிலையை வலுப்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.

இந்தியா – ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேரடியாக கருத்து வெளியிடவில்லை என்றாலும், அவரது நிலைப்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் அமெரிக்க கருவூலத் துறை அமைச்சர் ஸ்காட் பெசன்ட் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியா உடன் வர்த்தக உடன்பாடு மேற்கொண்டதன் மூலம், ஐரோப்பிய ஒன்றியம் தங்களுக்கு எதிரான போருக்கு மறைமுகமாக நிதியளிப்பதாக ஸ்காட் பெசன்ட் குற்றம் சாட்டியுள்ளார். ரஷ்யாவுடன் எரிசக்தி உறவுகளை ஐரோப்பா குறைத்துக் கொண்டிருந்தாலும், இந்தியாவிடமிருந்து ரஷ்ய எண்ணெயை வாங்குவதன் மூலம், ரஷ்யா – உக்ரைன் போருக்கு ஐரோப்பிய ஒன்றியம் மறைமுக ஆதரவு வழங்குகிறது என்ற பழைய குற்றச்சாட்டையே அவர் மீண்டும் முன்வைத்துள்ளார்.

மாஸ்கோவின் எரிசக்தி வர்த்தகத்தை பாதிக்க வாஷிங்டன் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தாலும், ஐரோப்பிய ஒன்றியம் உலக எண்ணெய் சந்தையில் உள்ள வாய்ப்புகளை பயன்படுத்தி பொருளாதார லாபம் ஈட்டுவதாகவும் ஸ்காட் பெசன்ட் விமர்சித்துள்ளார். இந்த விமர்சனங்கள், இந்தியா – ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு ஏற்படுத்திய அதிருப்தியை வெளிப்படையாக காட்டுவதாக பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட கனடா, இந்த ஒப்பந்தத்தை உற்சாகமாக வரவேற்றுள்ளது. கனடாவின் எரிசக்தி அமைச்சர் டிம் ஹாட்க்சன், டிரம்பை நேரடியாக குறிப்பிடாமல் விமர்சித்ததோடு, இந்தியா மேற்கொண்டுள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், வரிகளை அதிகார ஆயுதமாக பயன்படுத்தும் உலக மேலாதிக்க சக்திக்கு அளிக்கப்பட்ட சரியான பதிலடி என தெரிவித்துள்ளார்.

கனடாவைப் போலவே, பல்வேறு நாடுகளும் இந்த ஒப்பந்தத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. இன்னும் ஓராண்டுக்குள் இந்த ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக கையெழுத்தாகும் பட்சத்தில், இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மட்டுமல்லாமல், உலகளாவிய பொருளாதாரத்திற்கும் இது பெரும் பயன் அளிக்கும் என பொருளாதார ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

விமான விபத்தில் அஜித் பவார் உயிரிழப்பு : பனிமூட்டமா? இயந்திரக் கோளாறா? – விசாரணை தீவிரம்

விமான விபத்தில் அஜித் பவார் உயிரிழப்பு : பனிமூட்டமா? இயந்திரக் கோளாறா?...

மக்கள் மாளிகையில் கம்பர் சிலை திறப்பு – ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்பு

மக்கள் மாளிகையில் கம்பர் சிலை திறப்பு – ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்பு சென்னை...

EU உடன் கையெழுத்தான வர்த்தக உடன்பாடு: இந்திய தொழில்துறைக்கு பலமடங்கு வளர்ச்சி – ரபிக் அகமது

EU உடன் கையெழுத்தான வர்த்தக உடன்பாடு: இந்திய தொழில்துறைக்கு பலமடங்கு வளர்ச்சி –...

மத்திய பட்ஜெட்டில் தொழில் துறையின் எதிர்பார்ப்புகள்: ரூஃப் டாப் சோலார் திட்டத்திற்கு மானியம் கிடைக்குமா?

மத்திய பட்ஜெட்டில் தொழில் துறையின் எதிர்பார்ப்புகள்: ரூஃப் டாப் சோலார் திட்டத்திற்கு மானியம்...