15 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கும் மசோதா
15 வயதுக்கு குறைவான சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்தக் கூடாது என்பதற்கான சட்ட மசோதாவுக்கு பிரான்ஸ் நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
பிரான்சில் குழந்தைகள் மற்றும் இளையோரின் மனநலம், உடல்நலம் ஆகியவற்றை பாதுகாக்கும் நோக்கில், 15 வயதுக்குட்பட்டோர் சமூக வலைதளங்களில் ஈடுபடுவதை கட்டுப்படுத்தும் மசோதா நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.
இந்த மசோதாவிற்கு ஆதரவாக 131 உறுப்பினர்கள் வாக்களித்த நிலையில், 21 பேர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் மூலம் மசோதா பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டு, அடுத்த கட்டமாக கீழவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தை வரவேற்றுள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், வரும் செப்டம்பர் மாதத்திற்குள் இந்த சட்டம் நடைமுறைக்கு வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து சமூக வலைதளமான ‘எக்ஸ்’ தளத்தில் கருத்து தெரிவித்துள்ள மேக்ரான், பிரான்ஸ் நாட்டின் குழந்தைகளின் மூளைகள் வணிகப் பொருளாக மாற்றப்படக் கூடாது என்றும், கணினி நிரல்கள் மூலம் அவர்களின் செயல்பாடுகள் கட்டுப்படுத்தப்படுவதை ஏற்க முடியாது என்றும் கூறியுள்ளார்.
இந்த சட்டம் அமலுக்கு வந்தால், சிறார்களின் சமூக வலைதள பயன்பாட்டிற்கு கட்டுப்பாடு விதிக்கும் ஆஸ்திரேலியாவிற்கு அடுத்த இரண்டாவது நாடாக பிரான்ஸ் மாறும். மேலும், உயர்நிலைப் பள்ளிகளில் செல்போன் பயன்பாட்டிற்கு தடை விதிக்கும் விதிகளும் இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.