பொருளாதார ஆய்வறிக்கை மக்களவையில் தாக்கல் – 7.2% வரை வளர்ச்சி கணிப்பு
நடப்பாண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கிய நிலையில், கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார்.
இந்த ஆய்வறிக்கையில், 2026–2027 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.8 முதல் 7.2 சதவீதம் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2025–2026 நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறை 4.8 சதவீதமாக குறைந்துள்ளதால், தனியார் நிறுவனங்களுக்கு கடன் பெறுவது எளிதாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 2026 நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறையை 4.4 சதவீதமாகக் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், இது வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க உதவும் எனவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மக்களவையை சபாநாயகர் ஓம் பிர்லா வரும் 1ஆம் தேதி காலை 11 மணி வரை ஒத்திவைத்தார். 2026–2027ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு ஒரு மணி நேரம் கழித்து மாநிலங்களவை கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.