அஜித் பவார் மறைவு – குடியரசு தலைவர், மத்திய அமைச்சர் அமித் ஷா இரங்கல்
மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவாரின் அகால மறைவிற்கு, குடியரசு தலைவர் மற்றும் பல முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள செய்தியில், விமான விபத்தில் அஜித் பவார் உயிரிழந்தது குறித்து அறிந்து ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்ததாக கூறியுள்ளார். அவரின் மறைவு மகாராஷ்டிராவின் வளர்ச்சிக்கான பங்களிப்பை இழக்கும் இழப்பாகும் என்றும், கூட்டுறவுத் துறையில் செய்த சேவையை பெரிதும் பாராட்டியுள்ளார். மேலும், விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவரின் குடும்பத்தினருக்கு தேவையான வலிமையை கடவுள் வழங்குமாறு பிரார்த்தனை செய்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள இரங்கலில், மகாராஷ்டிரா துணை முதல்வர், NDA கூட்டணிக் கட்சித் தலைவர் ஆகிய அஜித் பவார் விபத்தில் உயிரிழந்த செய்தி தன்னை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியதாகவும், மாநில மக்களுக்கு அவர் அர்ப்பணித்த சேவையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்றும் கூறியுள்ளார். அவர் மறைவு NDA குடும்பத்துக்கும் தனிப்பட்ட இழப்பாகும் என்றும் அமித் ஷா குறிப்பிட்டார்.
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள இரங்கலில், அஜித் பவார் மகாராஷ்டிராவின் வளர்ச்சிக்காக தன்னையே அர்ப்பணித்தவர் என்றும், பொதுச் சேவை மற்றும் மக்களின் நலனுக்கான அவரது அர்ப்பணிப்பு என்றும் நினைவுகூரப்படுவார் என குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அமைச்சர் எல்.முருகன் பதிவில், அஜித் பவாரின் திடீர் மறைவு ஆழ்ந்த வருத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது. மூன்று தசாப்தங்களுக்கு மேல் தொடர்ந்த அவரது சேவை மகாராஷ்டிரா நிர்வாகத்தில் மிக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வெளியிட்டுள்ள இரங்கலில், பாராமதி தொகுதியிலிருந்து எட்டு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட, அனுபவமிக்க நிர்வாகியும் முக்கியத் தலைவருமான அஜித் பவார், பொதுச் சேவை மற்றும் மாநில நலனுக்காக தன்னைத்தான் அர்ப்பணித்தவர் என தெரிவித்துள்ளார். அவரது திடீர் மறைவு மாநிலம் மற்றும் நாடு முழுவதும் ஒரு பெரும் இழப்பாகும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.