மத்திய பட்ஜெட்டில் சலுகைகள் வருமா? – திருப்பூர் பனியன் நகரத்தின் எதிர்பார்ப்பு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த வரி நடவடிக்கையின் பின்னணியில் திருப்பூர் நகரில் ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு உற்பத்தி தொடர்பான தொழில்கள் மத்திய பட்ஜெட்டில் சலுகைகள் பெறுமா என எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
திருப்பூர் பனியன் துறை ஆண்டு தோறும் 45,000 கோடி ரூபாய் மதிப்பிலான அந்நிய செலாவணி ஈட்டுகிறது. உள்நாட்டு வர்த்தகத்தில் மேலும் 35,000 கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்று, இதன் மூலம் தமிழகத்திலிருந்து பீகார், ஒரிசா, உத்தரபிரதேசம் போன்ற வட இந்திய மாநிலங்களின் தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.
திருப்பூரில் 10,000க்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள், சாய ஆலைகள், எம்ராய்டரி பிரின்டிங் போன்ற சார்பு நிறுவனங்களும் இயங்குகின்றன. இதன் மூலம் ஆண்டு முழுவதும் பத்து லட்சத்திற்கு மேற்பட்டோர் வேலை வாய்ப்பு பெறுகின்றனர்.
ஆனால், அமெரிக்காவில் 50 சதவீத வரிவிதிப்பு காரணமாக அமெரிக்க ஆர்டர்கள் பெரும்பாலும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் 45 சதவீத சுணக்கம் ஏற்பட்டது. முன்னர் பெரிய அளவில் (1–2 லட்சம் ஆடைகள்) வரும் ஆர்டர்கள் தற்போது குறைந்த அளவிலேயே (5,000–10,000 ஆடைகள்) மட்டுமே கிடைக்கின்றன. இதன் விளைவாக தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் செயல்பாடுகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஐரோப்பிய மற்றும் பல்வேறு நாடுகளுடன் வரி இல்லா வர்த்தக ஒப்பந்தங்கள் இருந்தாலும், அங்கு இருந்து ஆர்டர்கள் வந்து தயாரிப்பில் காலதாமதம் ஏற்படலாம் என ஏற்றுமதியாளர்கள் குறிப்பிடுகின்றனர். இதுவரை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றவும், பணப்பிரச்சனை இல்லாமல் தொழில் நடத்தவும், மத்திய அரசின் பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, வங்கிக் கடன்களுக்கு தள்ளுபடி, வட்டி குறைப்பு, கட்டணம் செலுத்தும் கால அவகாசம் நீட்டிப்பு போன்ற உதவிகள் வழங்கப்பட வேண்டும். அதேபோல், “டியூட்டி ட்ராபேக்” அதிகரிப்பு, மிகச்சிறிய மைக்ரோ நிறுவனங்களுக்கு மானியம் மற்றும் சலுகைகள், சிறுபான்மையினர் தொழில்களை ஊக்குவிக்கும் திட்டங்கள் ஆகியவை சேர்க்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுப்பப்பட்டிருக்கிறது.
திருப்பூரில் பணிபுரியும் தொழிலாளர்களுக்காக, அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் நகரத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் கோரப்படுகிறது.
இதனால், மத்திய பட்ஜெட்டில் எந்த வகையான அறிவிப்புகள் வரும் என்பதற்காக, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.