பாகிஸ்தானை விட்டு வெளியேறியது ஐக்கிய அரபு அமீரகம்
பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமாபாத் சர்வதேச விமான நிலையத்தை நிர்வகிக்கும் ஒப்பந்தத்தில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகியுள்ளது. அமீரக அதிபர் அண்மையில் இந்தியா வந்தபோது பிரதமர் மோடியுடன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய சில நாட்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியானது.
அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் பாகிஸ்தானுக்கு வழங்கி வந்த உதவிகளை குறைத்து வருகின்றன. இதனால் பாகிஸ்தான் வளைகுடா நாடுகளுடனும், பிற இஸ்லாமிய நாடுகளுடனும் வர்த்தக மற்றும் ராணுவ தொடர்புகளை வலுப்படுத்த முயற்சி செய்து வருகிறது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், பாகிஸ்தான் சவுதி அரேபியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதன்படி, அந்த இரு நாடுகளில் ஒன்றில் தாக்குதல் ஏற்பட்டால், மற்ற நாட்டின் மீதும் தாக்குதல் நடைபெறுகிறது எனக் கருதப்படும். அதே போல், பாகிஸ்தான் லிபியாவுடனும் ராணுவ ஒப்பந்தத்தில் இணைந்துள்ளது. மேலும், எல்என்ஜி சரக்குகளை வாங்குவதற்காக கத்தாருடனும் பரஸ்பர ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
அந்த வரிசையில், பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை நிர்வகிக்க ஐக்கிய அரபு அமீரகம் உடன்படிக்கை செய்திருந்தது. பல தசாப்தங்களாக பாகிஸ்தானின் முக்கிய வர்த்தக கூட்டாளியாகவும், அந்நிய செலாவணியின் ஆதாரமாகவும் அமீரகம் இருந்து வருகிறது. பாகிஸ்தானில் இருந்து ஆண்டுதோறும் மில்லியன் கணக்கானோர் வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா காரணமாக அமீரகத்திற்கு பயணம் செய்கின்றனர்.
இந்த சூழலில், பாகிஸ்தான் தலைநகரில் விமான நிலைய நிர்வாக ஒப்பந்தம் மேற்கொள்ள ஐக்கிய அரபு அமீரகம் முன்வந்தது. விமான போக்குவரத்து மற்றும் வர்த்தக துறையில் இரு நாடுகளின் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கத்தில் இது செய்யப்பட்டது.
ஆப்கானிஸ்தான் போன்ற சவாலான சூழல்களில் விமான நிலையங்களை நிர்வகித்த அனுபவம் UAE-க்கு இருப்பதால், அந்த ஒப்பந்தம் பாகிஸ்தானின் விமான போக்குவரத்துக்கு புதிய உயரங்களை வழங்குமென எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், கடந்த 19ம் தேதி ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது இந்தியா வந்தார். டெல்லியில் வெறும் 3 மணி நேரம் தங்கி, பிரதமர் மோடியுடன் பல்வேறு விவகாரங்களில் பேச்சுவார்த்தை நடத்தி முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.
ஆனால் இந்த சந்திப்புக்குப் பிறகு, இஸ்லாமாபாத் விமான நிலைய நிர்வாக ஒப்பந்தத்தில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகியுள்ளதாக பாகிஸ்தானின் The Express Tribune நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. அந்த செய்தி நிறுவனத்தின் தகவல் படி, அமீரகத்திற்கு இந்த திட்டத்தில் இணைவதில் ஆர்வமில்லை என்பதால்தான் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
ஐக்கிய அரபு அமீரகம் பாகிஸ்தானுடன் உறவை விரும்பாததால், ஒப்பந்தத்தை நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இது பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட பெரிய பின்னடைவாகும்.
அமீரக அதிபர் இந்தியா வந்த வெறும் 3 மணி நேரத்திற்குப் பிறகே பாகிஸ்தானின் முக்கிய ஒப்பந்தம் கைவிடப்பட்டுள்ளது. இதையடுத்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் 3 நாள் பயணமாக இந்தியாவிற்கு வந்து சேர்ந்துள்ளனர். இதனால் பாகிஸ்தான் எதிர்காலத்தில் மேலும் என்ன இழப்புகளை சந்திக்கும் என்பது அடுத்த சில வாரங்களில் தெளிவாக தெரியும்.