சிறுமி தவறவிட்ட தேசியக் கொடியை எடுத்து மரியாதையுடன் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்
இந்திய தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தும் ஆட்டோ ஓட்டுநரின் செயல் தொடர்பான காணொளி, தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
77-வது குடியரசு தினம் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்ட வேளையில், ஒரு சிறுமி காரின் ஜன்னல் வழியாக தேசியக் கொடியை அசைத்தபடி மகிழ்ச்சியுடன் பயணம் செய்து கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில், எதிர்பாராத வகையில் கொடி அவரது கையிலிருந்து வழுக்கி சாலையில் விழுந்தது. இதை கவனித்துக் கொண்டிருந்த பின்னால் வந்த ஆட்டோ ஓட்டுநர், உடனடியாக தனது வாகனத்தை நிறுத்தினார்.
பின்னர் ஆட்டோவில் இருந்து இறங்கி, சாலையில் கிடந்த தேசியக் கொடியை எடுத்த அவர், அதில் படிந்திருந்த தூசியை மெதுவாக துடைத்து, அன்புடன் சிறுமியிடம் மீண்டும் வழங்கினார்.
இந்த நிகழ்வை ஆட்டோவில் பயணித்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்ததைத் தொடர்ந்து, தேசப்பற்று என்பது சொற்களில் மட்டுமல்ல, இவ்வாறு செய்யப்படும் சிறிய செயல்களிலும் வெளிப்படும் என பலரும் ஆட்டோ ஓட்டுநரை பாராட்டி வருகின்றனர்.