மணாலியில் 25 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசலில் தவித்த சுற்றுலா பயணிகள்
மணாலி பகுதியில் பெய்து வரும் கனமான பனிப்பொழிவால் பிரதான சாலைகள் அடைக்கப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் 25 மணி நேரத்தை கடந்தும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு மாவட்டத்தில் அமைந்துள்ள மணாலி நகரில், கடந்த இரண்டு நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து கடும் பனிப்பொழிவு காணப்பட்டு வருகிறது. இதன் விளைவாக, 600-க்கும் அதிகமான சாலைகள் பனியால் மூடப்பட்டு, வாகன இயக்கம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
பல முக்கிய பாதைகள் பயன்பாட்டிற்கு ஏற்றதாக இல்லாத நிலையில், சுற்றுலா வந்தவர்கள் கடும் குளிரில் நீண்ட நேரம் வாகனங்களுக்குள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலைக்கு உள்ளாகினர். சுமார் 15 கிலோமீட்டர் தூரம் வரை நீண்ட போக்குவரத்து நெரிசலால், சிலர் தங்கள் வாகனங்களை வழியிலேயே நிறுத்தி, 10 முதல் 20 கிலோமீட்டர் வரை நடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சூழலில், மணாலிக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகை தந்ததும், தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பியதுமாக இருந்ததால், பிரச்சனை மேலும் தீவிரமடைந்ததாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அவசியமற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என்றும், பாதுகாப்பு தொடர்பான அறிவுறுத்தல்களை கடைபிடிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.