EPFO விதிகள் மாற்றம் – காங்கிரஸ், திரிணமூல் கடும் கண்டனம்
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) விதிகளில் மத்திய அரசு செய்துள்ள மாற்றங்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இதன் மூலம் ஓய்வூதியர்களும் வேலை இழந்தவர்களும் பாதிக்கப்படுவார்கள் என்று காங்கிரஸ் மற்றும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
காங்கிரஸ் மூத்த தலைவர் மற்றும் விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாக்கூர் கூறியதாவது:
“மோடி அரசின் புதிய EPFO விதிகள் கொடூரமானவை. வேலை இழந்தவர்கள் தங்கள் சொந்த சேமிப்பைப் பெற தண்டிக்கப்படுகிறார்கள். இது மக்களின் வாழ்வை அழிக்கும் நடவடிக்கை. மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவின் முடிவை பிரதமர் மோடி உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.”
புதிய விதிகளின்படி —
- வேலை இழந்தவர் 12 மாதங்கள் கழித்தே தனது பிஎஃப் தொகையை திரும்பப் பெற முடியும்.
- 36 மாதங்கள் கழித்தே ஓய்வூதியத்தை பெற முடியும்.
- 25% EPF தொகையை எப்போதுமே எடுக்க முடியாது.
இதைக் கண்டித்த மாணிக்கம் தாக்கூர் மேலும் கூறினார்:
“இத்தகைய விதிகளால் தொழிலாளர்கள் அல்ல, அரசின் நெருங்கியவர்கள்தான் லாபம் அடைகிறார்கள். இது சீர்திருத்தம் அல்ல, கொள்ளை. தொழிலாளர் வர்க்கத்தின் வாழ்வையும் கண்ணியத்தையும் அழிக்கும் செயல் இது,” என்றார்.
திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சாகேத் கோகலே தனது எக்ஸ் பதிவில்,
“புதிய EPFO விதிகள் அதிர்ச்சியூட்டும் வகையிலும் ஆபத்தானவையும். இது சம்பளத்தார் பணத்தை வெளிப்படையாகக் களவாடும் செயல். முன்பு 2 மாதங்களில் கிடைத்த தொகை இப்போது 12 மாதங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது; ஓய்வூதியம் பெற 3 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியுள்ளது. இது நடுத்தர வர்க்க மக்களின் வாழ்வை சீரழிக்கும்,”
என்று விமர்சித்துள்ளார்.
அதேபோல், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமதுவும் மத்திய அரசின் இந்த முடிவை கடுமையாகக் கண்டித்துள்ளார்.