எகிப்தில் இன்று காசா அமைதி உச்சி மாநாடு – பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் அழைப்பு; அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகிறது
இஸ்ரேல்–ஹமாஸ் மோதலை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில், எகிப்தின் ஷாரம் எல் ஷேக் நகரில் இன்று காசா அமைதி உச்சி மாநாடு நடைபெறுகிறது.
இந்த மாநாட்டுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் எகிப்து அதிபர் அப்தெல் பட்டா அல் சிசி இணைந்து தலைமை தாங்குகின்றனர். இதில் ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ், இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தாலும், அவர் மாநாட்டில் பங்கேற்க மாட்டார் என கூறப்படுகிறது. இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்திவர்தன் சிங் பங்கேற்கிறார்.
இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் பின்னணி
2023 அக்டோபர் 7 அன்று, இஸ்ரேலில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ஹமாஸ் திடீர் தாக்குதல் நடத்தியதில் 1,200 பேர் உயிரிழந்தனர்; 250 பேர் பிணைக்கைதிகளாக பிடிக்கபட்டனர். இதையடுத்து, இஸ்ரேல் காசா மீது கடும் தாக்குதல் நடத்தியது. சுமார் 67,000 பாலஸ்தீனர்கள் உயிரிழந்ததாக தகவல்.
ட்ரம்பின் முயற்சியால் சமீபத்தில் இரு தரப்பினரிடையே போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டது. அதன் அடிப்படையில், இஸ்ரேல் தனது சில படைகளை வாபஸ் பெற்றது. மேலும், ஹமாஸ் அமைப்பு இன்று மீதமுள்ள 20 இஸ்ரேல் கைதிகளை விடுவிக்கவுள்ளது; அதேபோல், இஸ்ரேல் 2,000 பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொண்டுள்ளது.
மாநாட்டின் நோக்கம்
எகிப்து அதிபரின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில்,
“காசா பகுதியில் போரை முடிவுக்கு கொண்டு வருதல், மத்திய கிழக்கில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை நிலைநிறுத்துதல், புதிய ஒத்துழைப்பு அத்தியாயத்தைத் தொடங்குதல்”
என்பவை மாநாட்டின் முக்கிய நோக்கங்களாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று மாநாட்டில் காசா அமைதி ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் ஹமாஸ் பிரதிநிதிகள் பங்கேற்பது உறுதி செய்யப்படவில்லை.
ஹமாஸ் புறக்கணிப்பு
ஹமாஸ் அமைப்பு, “ஆயுதங்களை கைவிட வேண்டும்” என்ற ட்ரம்பின் நிபந்தனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாநாட்டை புறக்கணிக்கிறது. மேலும், பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் உரையாற்ற அனுமதி கேட்கப்பட்டும், அது ஏற்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், பாலஸ்தீன மக்கள் ஆயிரக்கணக்கானோர் நடைபயணமாகவும் வாகனங்களில் மூலமாகவும், காசா கடற்கரை வழியாக சேதமடைந்த தங்கள் வீடுகளை நோக்கி திரும்பி வருகின்றனர்.