குடியாத்தம் அரசு மருத்துவமனை விவகாரம்: இபிஎஸ் போராட்ட அறிவிப்பு – திமுக திறப்பு தேதி அறிவிப்பு
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனை திறப்பு விவகாரத்தில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) போராட்டத்தை அறிவித்த ஒரு மணி நேரத்திலேயே, திமுக தரப்பில் மருத்துவமனை திறப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடியாத்தம் நகராட்சியில் சுமார் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய அரசு தலைமை மருத்துவமனை கட்டப்பட்டு பல மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனை கண்டித்து, வரும் 27ஆம் தேதி குடியாத்தத்தில் போராட்டம் நடத்தப்படும் என எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டார்.
இந்த அறிக்கை வெளியான ஒரு மணி நேரத்திற்குள், வேலூர் தெற்கு மாவட்ட திமுக மாவட்டச் செயலாளர் ஏ.பி. நந்தகுமார், வரும் 26ஆம் தேதி குடியாத்தம் அரசு மருத்துவமனை திறக்கப்படும் என வாட்ஸ்அப் குழுக்களில் பதிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நடவடிக்கை, இபிஎஸ் அறிவித்த போராட்டத்திற்கு உடனடியாக திமுக தரப்பில் பதிலடி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.