167 பேரின் உயிரை காப்பாற்றிய விமானி மீது நஷ்டஈடு வழக்கு – விமான நிறுவனத்தின் சர்ச்சை நடவடிக்கை
ரஷ்யாவில் பழுதடைந்த விமானத்தை அவசரமாக விவசாய நிலத்தில் பாதுகாப்பாக தரையிறக்கி, 167 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய விமானியிடம், சுமார் 13 லட்சம் அமெரிக்க டாலர் நஷ்டஈடு கோரி விமான நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.
2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், ரஷ்யாவைச் சேர்ந்த ஏர்பஸ் A320 விமானம், ஹைட்ராலிக் அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடுவானில் கட்டுப்பாட்டை இழந்தது.
அந்த நெருக்கடியான தருணத்தில், விமானத்தின் கேப்டன் செர்கே பெலோவ் உடனடி முடிவெடுத்து, அருகிலிருந்த விவசாய நிலத்தில் விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கினார்.
மாற்று விமான நிலையத்தை அடைய போதுமான எரிபொருள் இல்லாத நிலையிலும், விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் என மொத்தம் 167 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
இந்த சம்பவத்துக்குப் பிறகு, செர்கே பெலோவ் ஒரு வீரராக கொண்டாடப்பட்டாலும், சில காலத்திற்குப் பின்னர் அவரும் மற்ற பணியாளர்களும் எந்த முன் அறிவிப்பும் இன்றி பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், விமானத்திற்கு ஏற்பட்ட சேதத்துக்கான பொறுப்பை கேப்டன் செர்கே பெலோவ் மீது சுமத்திய விமான நிறுவனம், அவரிடம் 13 லட்சம் அமெரிக்க டாலர் இழப்பீடு வழங்குமாறு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இதற்கு பதிலளித்து செர்கே தரப்பு தாக்கல் செய்த மனுவில், விமான சேத மதிப்பீடு முறையான விதிமுறைகளை பின்பற்றாமல் மேற்கொள்ளப்பட்டதாகவும், கணக்கீடுகள் சரியான ஆவண ஆதாரங்களின்றி தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தற்போது ரஷ்யாவில் மட்டுமல்லாமல் உலகளாவிய அளவிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.