ஜம்மு–காஷ்மீரில் ராணுவ வாகன விபத்து: 10 வீரர்கள் உயிரிழப்பு – பிரதமர் மோடி இரங்கல்
ஜம்மு–காஷ்மீரில் ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து ஏற்பட்ட கோர விபத்தில் 10 ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
குடியரசு தினத்தை முன்னிட்டு, ஜம்மு–காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த சூழலில், தோடா மாவட்டத்தில் 17 ராணுவ வீரர்களுடன் சென்ற ராணுவ வாகனம், திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 200 அடி ஆழமான பள்ளத்தில் புரண்டு விழுந்தது. இந்த விபத்தில் 10 வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த மற்ற வீரர்கள் உடனடியாக ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த துயர சம்பவம் குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பதிவில் இரங்கல் தெரிவித்துள்ளார். வீரர்களின் உயிரிழப்பு மிகுந்த வேதனையளிப்பதாகவும், நாட்டிற்காக துணிச்சலுடன் பணியாற்றிய வீரர்களை நாம் இழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உயிர்நீத்த வீரர்களின் தியாகமும் சேவையும் நாட்டினரால் எப்போதும் நினைவுகூரப்படும் என பிரதமர் மோடி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.