டாவோஸ் மேடையில் ட்ரம்பின் தொடர் தவறான கூற்றுகள் – வெளிச்சத்திற்கு வந்த உண்மைகள்
கிரீன்லாந்தை கைப்பற்றும் நோக்கில் தீவிரமாக கருத்துகள் வெளியிட்டு வரும் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஸ்விட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தின் ஆண்டு கூட்டத்தில், உண்மைக்குப் புறம்பான பல கருத்துகளை முன்வைத்து விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
கிரீன்லாந்து வட அமெரிக்காவின் ஒரு பகுதியாகும் என கூறிய ட்ரம்ப், அந்த தீவு அமெரிக்காவுக்கே உரியது என்றும், அதை குத்தகைக்கு எடுத்துள்ள டென்மார்க் அதை திருப்பி வழங்க மறுப்பது நியாயமற்றது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், கிரீன்லாந்தை கைப்பற்ற அமெரிக்கா ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் கூறினார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு கிரீன்லாந்தை அமெரிக்கா டென்மார்க்கிடம் திருப்பி அளித்ததாக ட்ரம்ப் கூறினாலும், வரலாற்று ரீதியாக கிரீன்லாந்து அமெரிக்காவின் சொத்து அல்ல என்பதே உண்மை.
1933 ஆம் ஆண்டில் சர்வதேச நீதிமன்றம், கிரீன்லாந்து டென்மார்க்கின் இறையாண்மைக்குட்பட்ட பகுதி எனத் தீர்ப்பளித்துள்ளது. 1941-ல் டென்மார்க் ஜெர்மனியிடம் சரணடைந்தபோது, பாதுகாப்பு தேவைக்காக மட்டுமே அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
அந்த ஒப்பந்தம், கிரீன்லாந்தில் அமெரிக்க ராணுவத் தளங்கள் அமைப்பதற்கும், படைகளை நிலைநிறுத்துவதற்கும் மட்டுமே அனுமதி அளித்தது. அந்தத் தீவின் இறையாண்மை குறித்த எந்த உரிமையும் அமெரிக்காவுக்கு வழங்கப்படவில்லை. எனவே, கிரீன்லாந்து ஒருபோதும் அமெரிக்காவின் சொந்த நிலமாக இருந்ததில்லை.
இதனைத் தொடர்ந்து, நேட்டோ அமைப்பை கடுமையாக விமர்சித்த ட்ரம்ப், நேட்டோவின் செலவுகளில் கிட்டத்தட்ட 100 சதவீதம் அமெரிக்காவே செலுத்துகிறது எனக் கூறினார்.
ஆனால் உண்மையில், நேட்டோ நாடுகளின் மொத்த பாதுகாப்புச் செலவுகளில் அமெரிக்காவின் பங்கு சுமார் 70 சதவீதம் மட்டுமே ஆகும். 2024-ல் அது 65 சதவீதமாகவும், 2025-ல் 62 சதவீதமாகவும் குறைந்துள்ளது.
மேலும், நேட்டோ உறுப்புநாடுகள் 2 சதவீதம் கூட செலவிடவில்லை என்றும், தாம் கூறிய பிறகே 5 சதவீதம் செலுத்த ஒப்புக்கொண்டதாகவும் ட்ரம்ப் கூறினார். இதுவும் உண்மைக்குப் பொருந்தாதது.
ஏனெனில், அனைத்து நேட்டோ நாடுகளும் தங்களது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தபட்சம் 2 சதவீதத்தை பாதுகாப்புக்காக ஒதுக்க திட்டமிட்டிருந்தன. அதோடு, அடுத்த பத்து ஆண்டுகளில் அதை 5 சதவீதமாக உயர்த்தவும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், அமெரிக்கா நேட்டோவிடமிருந்து எதையும் பெறவில்லை என்றும், ஒருபோதும் உதவி கேட்கவில்லை என்றும் ட்ரம்ப் கூறியது அப்பட்டமான பொய் என விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கூட்டு பாதுகாப்பு கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பின் 5வது பிரிவு, எந்த ஒரு உறுப்புநாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டாலும், அது அனைத்து உறுப்புநாடுகளின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகக் கருதப்படும் என கூறுகிறது.
9/11 இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பிறகு, இந்த 5வது பிரிவு செயல்படுத்தப்பட்ட ஒரே நாடு அமெரிக்காதான். அதன்பின் நடந்த ஆப்கானிஸ்தான் போரில், டென்மார்க் உள்ளிட்ட அனைத்து நேட்டோ நாடுகளும் அமெரிக்காவுக்கு ராணுவ ஆதரவை வழங்கின.
குறிப்பாக, ஆப்கானிஸ்தானில் உயிரிழந்த நேட்டோ வீரர்களில் டென்மார்க் வீரர்களே அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், காற்றாலை மின்சாரத்தை “பசுமை மோசடி” என விமர்சித்த ட்ரம்ப், சீனா காற்றாலைகளை ஐரோப்பாவுக்கு விற்கிறதே தவிர, தாம் சீனாவில் எந்த காற்றாலைப் பண்ணையையும் காணவில்லை என்றும் கூறினார்.
ஆனால் உண்மையில், உலகின் மிகப்பெரிய காற்றாலை மின் நிலையம் சீனாவின் Gansu மாகாணத்தில் அமைந்துள்ளது. உலகில் அதிக அளவு காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்யும் நாடாக சீனா திகழ்கிறது. 2024ஆம் ஆண்டில் மட்டும், சீனா காற்றிலிருந்து 997 டெராவாட் மணி மின்சாரத்தை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது.
இதற்குப் பிறகு, கடந்த ஓராண்டில் அமெரிக்காவுக்கு 18 ட்ரில்லியன் டாலர் முதலீடுகளை ஈர்த்ததாக ட்ரம்ப் பெருமை பேசினார். ஆனால் வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ இணையதள தகவலின்படி, ஜனவரி மாதத்திற்குப் பிறகு கொண்டுவரப்பட்ட மொத்த முதலீடுகள் 9.6 ட்ரில்லியன் டாலர்கள் மட்டுமே ஆகும்.
கடந்த வாரம், கிரீன்லாந்து விவகாரத்தை முன்வைத்து 8 ஐரோப்பிய நாடுகள் மீது ட்ரம்ப் வரி விதித்ததையடுத்து, ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் சர்வதேச வர்த்தகக் குழு, அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை இடைநிறுத்தியது.
டாவோஸ் மாநாட்டு மேடையில் இத்தனை சர்ச்சையான கருத்துகளை முன்வைத்த போதும், உலகில் எட்டு போர்களுக்கு தீர்வு கண்டதாக கூறும் தனது பழைய வாக்கியத்தை மீண்டும் ஒருமுறை ட்ரம்ப் கூறியதும் கவனத்தை ஈர்த்தது.