காசா அமைதி வாரியத்தில் பங்கேற்ற பாகிஸ்தான் – நாட்டுக்குள் வெடித்தெழும் எதிர்ப்பு

Date:

காசா அமைதி வாரியத்தில் பங்கேற்ற பாகிஸ்தான் – நாட்டுக்குள் வெடித்தெழும் எதிர்ப்பு

காசா பகுதியை மறுசீரமைப்பதற்காக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உருவாக்கியுள்ள ‘Board of Peace’ (அமைதி வாரியம்) குழுவில் பாகிஸ்தான் இணைந்ததை தொடர்ந்து, அந்த நாட்டில் கடும் அரசியல் மற்றும் சமூக எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இது பாலஸ்தீன மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் முயற்சி என்றும், உலகளாவிய அளவில் ஐநா அமைப்பை புறக்கணிக்கும் செயல் என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இஸ்ரேல்–ஹமாஸ் போருக்கு முடிவுகாணும் நோக்கில், முன்பே ட்ரம்ப் அறிவித்த காசா அமைதி திட்டத்தின் ஒரு பகுதியாக, அவரின் தலைமையில் இந்த அமைதி வாரியம் உருவாக்கப்பட்டது.

இந்த வாரியத்தில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் கேப்ரியல், ட்ரம்பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப், அவரது மருமகன் ஜாரெட் குஷ்னர், மேலும் பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

போரால் கடுமையாக சேதமடைந்த காசாவை மீள்கட்டமைக்கவும், அங்கு நீடித்த அமைதியை ஏற்படுத்தவும் உருவாக்கப்பட்ட இந்த அமைதி வாரியத்தில் பங்கேற்க இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளுக்கு ட்ரம்ப் அழைப்பு விடுத்திருந்தார்.

இதில் ஏற்கெனவே துருக்கி, கத்தார், ஹங்கேரி, இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் இணைந்துள்ள நிலையில், தற்போது பாகிஸ்தானும் இந்த குழுவில் சேர முடிவு செய்துள்ளது.

ஆனால், பிரதமர் ஷெஹ்பாஸ் ஷரீப் தலைமையிலான அரசு எடுத்த இந்த தீர்மானம், பாகிஸ்தானுக்குள் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அல்லாமா ராஜா நசீர் அப்பாஸ், இந்த முடிவு கொள்கை ரீதியாகவும் ஒழுக்க ரீதியாகவும் தவறானது என்றும், எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாதது என்றும் விமர்சித்துள்ளார். இது புதிய காலனித்துவ அரசியலின் வெளிப்படை வடிவம் என்றும், காசாவின் மறுசீரமைப்பு, பாதுகாப்பு மற்றும் அரசியல் நிர்வாகத்தை அந்நிய சக்திகளிடம் ஒப்படைக்கும் முயற்சி என்றும் அவர் தனது எக்ஸ் (X) பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், குறுகிய கால அரசியல் கணக்கீடுகளின் அடிப்படையில் எடுக்கப்படும் வெளிநாட்டு கொள்கை முடிவுகள், நாட்டுக்கு நீண்டகால பாதிப்புகளை உருவாக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இதேபோல், நாடாளுமன்றத்தில் எந்தவிதமான பொது விவாதமும் நடத்தாமல் அமைதி வாரியத்தில் இணைந்தது, நாட்டை புறக்கணிக்கும் செயலாகும் என்று

Tehreek-i-Tahafuz-i-Ayeen-i-Pakistan அமைப்பின் தலைவர் முஸ்தபா நவாஸ் கோகர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், நிரந்தர உறுப்பினர் பதவிக்காக ஒரு பில்லியன் டாலர் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருப்பது, இது பணக்கார நாடுகளுக்கான சங்கமாக மாறுவதை காட்டுகிறது என்றும், அத்தகைய சங்கங்கள் எவ்வாறு செயல்படும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஐநா சபைக்கான பாகிஸ்தானின் முன்னாள் தூதர் மலீஹா லோதி, இந்த முடிவை விவேகமற்றது என விமர்சித்துள்ளார். ட்ரம்ப் எடுக்க உள்ள ஒருதலைப்பட்ச நடவடிக்கைகளுக்கு சர்வதேச ஆதரவும் சட்டப்பூர்வ அங்கீகாரமும் பெறுவதற்காகவே இந்த அமைதி வாரியம் உருவாக்கப்பட்டதாகவும் அவர் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஜாஹித் ஹுசைன், இஸ்லாமாபாத் அவசரமாக முடிவு எடுத்துவிட்டதாக கூறியுள்ளார். சமூக ஆர்வலர் அம்மார் அலி ஜான், இதை ஆட்சியாளர்களின் வெட்கக்கேடான துரோகம் என கடுமையாக சாடியுள்ளார்.

மேலும், எழுத்தாளரும் சமூக செயற்பாட்டாளருமான பாத்திமா பூட்டோ, பாலஸ்தீனர்களுக்கு எதிரான இனப்படுகொலையில் ஈடுபட்ட இஸ்ரேலுடன் ஒரே அமைதி வாரியத்தில் பாகிஸ்தான் அமருவது எப்படி சாத்தியம்? என கேள்வி எழுப்பி, இது நாட்டுக்கு பெரும் அவமானம் என பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

நாங்கள் அனைவரும் ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தின் தொண்டர்களே – எதிரிகள் இதை மறந்துள்ளனர்: டிடிவி தினகரன்

நாங்கள் அனைவரும் ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தின் தொண்டர்களே – எதிரிகள் இதை...

தேசிய ஜனநாயக கூட்டணி தமிழர் நலனைக் காக்கும் வலுவான அமைப்பு – நயினார் நாகேந்திரன்

தேசிய ஜனநாயக கூட்டணி தமிழர் நலனைக் காக்கும் வலுவான அமைப்பு –...

தேசிய ஜனநாயக கூட்டணி மாநாட்டில் திரண்ட பெருந்திரள் – மக்கள் பேரலையில் திளைத்த மதுராந்தகம்

தேசிய ஜனநாயக கூட்டணி மாநாட்டில் திரண்ட பெருந்திரள் – மக்கள் பேரலையில்...

கடல் பாதுகாப்பில் புதிய யுகம் – ரஃபேலிடமிருந்து Ice Breaker ஏவுகணையை பெறும் இந்தியா

கடல் பாதுகாப்பில் புதிய யுகம் – ரஃபேலிடமிருந்து Ice Breaker ஏவுகணையை...