கடல் பாதுகாப்பில் புதிய யுகம் – ரஃபேலிடமிருந்து Ice Breaker ஏவுகணையை பெறும் இந்தியா
கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், ரஃபேல் நிறுவனத்திடமிருந்து Ice Breaker குரூஸ் ஏவுகணையை வாங்க இந்திய விமானப்படை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த முடிவு, இந்தியாவின் கடல் பாதுகாப்பு வியூகத்தில் ஒரு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளின் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள, இந்தியா முழுமையான பாதுகாப்புத் தயாரிப்புகளை மேற்கொண்டு வருகிறது. அதே நேரத்தில், பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு இந்தியா என்ற இலக்கை நோக்கி நாடு வேகமாக முன்னேறி வருகிறது.
இந்த சூழலில், இந்திய-பசிபிக் கடல் பகுதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த Ice Breaker குரூஸ் ஏவுகணைகளைப் பெற இந்தியா திட்டமிட்டுள்ளது.
சுமார் 4 மீட்டர் நீளமும், 400 கிலோகிராமுக்கு குறைவான எடையும் கொண்ட இந்த ஏவுகணை, 250 பவுண்ட் வெடிபொருள்களை ஏற்றிக் கொண்டு, 300 கிலோமீட்டர் தூரம் வரை சென்று இலக்கைத் தாக்கும் திறன் பெற்றதாகும்.
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் மிகத் துல்லியமான தாக்குதல்களை மேற்கொள்ளும் Ice Breaker, முழுமையாக தானியங்கி முறையில் செயல்படக்கூடியதாக இருந்தாலும், தேவையான நேரங்களில் கடற்படையினர் அதன் பாதையை மாற்றும் வசதியும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
மிகக் குறைந்த உயரத்தில் பறக்கும் இந்த ஏவுகணை, Very Low Observable தொழில்நுட்பத்தின் மூலம், நவீன வான் பாதுகாப்பு அமைப்புகளை ஏமாற்றி இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டதாகும்.
மேலும், Electro-Optical Seeker மற்றும் AI அடிப்படையிலான இலக்கு அடையாளம் காணும் தொழில்நுட்பம் மூலம் சரியான இலக்குகளை மட்டும் தாக்கும் தனிச்சிறப்பும் Ice Breaker ஏவுகணைக்கு உள்ளது. குறிப்பிடத்தக்க அம்சமாக, GPS இல்லாமலேயே செயல்படக்கூடிய திறன் இதில் உள்ளது.
அனைத்து வானிலை சூழ்நிலைகளிலும், மின்னணு போர் நிறைந்த கடினமான சூழல்களிலும் சிறப்பாக செயல்படக்கூடிய இந்த Ice Breaker ஏவுகணையை இந்திய விமானப்படை தனது படை வலுவில் இணைக்க உள்ளது.
‘மேக் இன் இந்தியா’ திட்டத்திற்கு ஏற்ப, Ice Breaker ஏவுகணையின் சில வகைகளை உள்நாட்டிலேயே தயாரிக்க, பாரத் டைனமிக்ஸ் நிறுவனம், ரஃபேல் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, அமெரிக்காவிலிருந்து 24 MH-60R ‘ரோமியோ’ சீ ஹாக் ஹெலிகாப்டர்கள் வாங்கப்பட்டபோது, அவற்றுடன் AGM-114 Hellfire ஏவுகணைகள் மற்றும் Mk-54 இலகுரக டார்பிடோக்கள் வாங்கவும் இந்தியக் கடற்படை முடிவு செய்திருந்தது.
அமெரிக்கக் கடற்படையில் பயன்படுத்தப்படும் Kongsberg Naval Strike Missile சுமார் 407 கிலோகிராம் எடை கொண்டதால், நீண்ட தூர கப்பல் எதிர்ப்பு தாக்குதலுக்கான அந்த ஏவுகணையை வாங்க இந்தியா விரும்பவில்லை.
இதனைத் தொடர்ந்து, குறைந்த எடையும் அதிக திறனும் கொண்ட ஏவுகணைகளை தேடிய இந்தியக் கடற்படை, Ice Breaker ஏவுகணையைத் தேர்வு செய்துள்ளது.
MH-60R ஹெலிகாப்டர்களில் இருந்து மறைந்தபடி தாக்கும் திறன் கொண்ட, 300 கிலோமீட்டர் தூரம் வரை செல்லக்கூடிய Ice Breaker குரூஸ் ஏவுகணையை இணைப்பது, இந்தியக் கடற்படையின் தாக்குதல் ஆற்றலை மேலும் உயர்த்தும் என மதிப்பிடப்படுகிறது.
மேலும், சுமார் 380 கிலோகிராம் எடையும், 55 கிலோமீட்டர் தூரம் வரை தாக்கும் திறனும் கொண்ட இந்தியாவின் குறுகிய தூர கப்பல் எதிர்ப்பு ஏவுகணை அமைப்புகளுடன் Ice Breaker-ஐ இணைக்க DRDO திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.