சொந்த குடிமக்கள் மீது கொடூர தாக்குதல் நடத்திய ஈரான் அரசு
ஈரானில் நடைபெற்ற மக்கள் எழுச்சியை அரசு எவ்வாறு இரக்கமின்றி அடக்கியது என்பதைக் கூறும் அதிர்ச்சிகர தகவல்கள் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. போராட்டத்தில் பங்கேற்றவர்களை நிர்வாணமாக நிறுத்தி வைத்ததுடன், அடையாளம் தெரியாத ஊசிகளை உடலில் செலுத்தி சித்திரவதை செய்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, நாணய மதிப்பு வீழ்ச்சி, வேலைவாய்ப்பின்மை போன்ற பிரச்சனைகளுக்கு எதிராகவும், மதகுருக்கள் தலைமையிலான ஆட்சியை எதிர்த்தும் கடந்த மாதம் ஈரானில் மக்கள் போராட்டம் தீவிரமடைந்தது. 1979 ஆம் ஆண்டு நடந்த மக்கள் புரட்சிக்கு இணையான அளவில் இந்த போராட்டம் பரவலாக இருந்ததாக கூறப்படுகிறது. ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், முழக்கங்கள் என நாடு முழுவதும் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
இந்த மக்கள் எழுச்சி ஆட்சி மாற்றத்திற்கே வழிவகுத்துவிடும் என அச்சமடைந்த ஆட்சியாளர்கள், போராட்டக்காரர்களை ஒடுக்க கடும் வன்முறையை பயன்படுத்தத் தொடங்கினர். சில வாரங்களிலேயே சுமார் 5,000 பேர் வரை உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த உயிரிழப்புகள் எவ்வாறு நிகழ்ந்தன என்பதைக் கூறும் விவரங்கள் தற்போது வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தை தளமாகக் கொண்ட டெய்லி எக்ஸ்பிரஸ் ஊடகம் இது குறித்து விரிவான செய்தியை வெளியிட்டுள்ளது. போராட்டங்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர்கள் நேரடியாக சிறைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். சிறை வளாகத்தில் அனைவரையும் வரிசையாக நிற்க வைத்து, அவர்களின் உடைகளை அகற்றி நிர்வாணப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. பின்னர், மிகக் குளிர்ந்த நீரை குழாய்கள் மூலம் பீய்ச்சி அடித்து கொடுமைப்படுத்தியுள்ளனர். இதற்கு மேலாக, அடையாளம் தெரியாத திரவங்களை ஊசி மூலம் உடலுக்குள் செலுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த ஊசிகளில் செலுத்தப்பட்ட திரவத்தின் தன்மை குறித்து எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் வழங்கப்படவில்லை. இந்த தகவல்களை பாதிக்கப்பட்டவர்களும், அவர்களது குடும்பத்தினரும் தெரிவித்துள்ளனர்.
கெர்மன்ஷா உள்ளிட்ட பல நகரங்களில் கைது செய்யப்பட்ட பெண்கள் மீது பாதுகாப்புப் படையினர் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இவ்வன்கொடுமைகளில் 16 வயது சிறுமி ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளதாக, KHRN (குர்திஸ்தான் மனித உரிமைகள் வலையமைப்பு) தெரிவித்துள்ளது.
மேலும், ஈரானின் பல பகுதிகளில் கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பேசிய ஈரான் நாட்டை சேர்ந்த ஒருவர், தொடர் கொலைகளால் தெருக்கள் முழுவதும் ரத்தம் வழிந்ததாகவும், பின்னர் அதை தண்ணீர் லாரிகள் மூலம் அதிகாரிகள் கழுவியதாகவும் தெரிவித்துள்ளார். இருந்தபோதிலும், Tajrish, Narmak போன்ற பகுதிகளில் ரத்தத்தின் துர்நாற்றம் நீங்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த கொடூரத்தின் உச்சமாக, பயன்படுத்தப்பட்ட தோட்டாக்களின் செலவினத்தை கூட கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரிடமிருந்து பாதுகாப்புப் படையினர் வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வளவு கடும் அடக்குமுறையால் ஒவ்வொரு தெருவிலும் குறைந்தது இரண்டு அல்லது மூன்று பேர் வரை கொல்லப்பட்டதாக ஒருவர் பிபிசிக்கு பேட்டியளித்துள்ளார்.
இந்த நிகழ்வுகள் உலகத்திற்கு வெளிவராமல் இருக்க, ஈரான் அரசு முதற்கட்டமாக இணைய சேவையை முழுமையாக துண்டித்துள்ளது. தகவல் பரிமாற்றத்தை தடுக்க, சீனா அல்லது ரஷ்யாவின் உயர்தர ராணுவ ஜாமர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், பொதுமக்களின் வீடுகளில் சோதனை நடத்தி, மறைத்து வைக்கப்பட்டிருந்த தொலைதொடர்பு சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அரசின் பாதுகாப்புப் படையினரும் அதிகாரிகளும், whitelist எனப்படும் ரகசிய நெட்வொர்க் மூலம் மட்டுமே தகவல்களை பரிமாறிக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவைச் சேர்ந்த HRANA அமைப்பு, ஈரானில் இதுவரை 4,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், 26,000 பேர் கைது செய்யப்பட்டதாகவும், குறைந்தது 5,800 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. ஆனால், பிற மனித உரிமை அமைப்புகள் இதைவிட அதிக எண்ணிக்கையை கூறுகின்றன.
ஈரான் இன்டர்நேஷனல் நிறுவனம் சுமார் 12,000 பேர் உயிரிழந்திருக்கலாம் எனவும், அமெரிக்காவின் CBS News நிறுவனம் இந்த எண்ணிக்கை 20,000 வரை இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது. உயிரிழந்த அனைவருக்கும் “மொஹரேப்” என்ற முத்திரையை ஈரான் அரசு குத்தியுள்ளது. அதாவது, “கடவுளுக்கு எதிராக போர் தொடுத்தவர்கள்” என்ற குற்றச்சாட்டு.
கொல்லப்பட்டவர்களின் உடல்களை கறுப்பு பைகளில் அடைத்து தரையில் போட்டு வைத்திருந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. தனது மகனின் உடலை தேடி அலையும் ஒரு தாயின் வீடியோ, பார்ப்பவர்களின் மனதை உலுக்குவதாக உள்ளது.
நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்தல், மர்ம ஊசிகள் செலுத்துதல், கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுக் கொல்வது போன்ற செயல்கள், ஹிட்லரின் ஆட்சியில் யூதர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கொடூரங்களை நினைவூட்டுவதாக உள்ளன. அந்த அடக்குமுறை பாணியை தற்போது ஈரான் அரசு தனது சொந்த மக்கள்மீதே பயன்படுத்தியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஈரானில் நடந்த போராட்டங்களை அரசு எவ்வாறு ஒடுக்கியது என்பதை வெளிப்படுத்தும் இந்த தகவல்கள், பனிப்பாறையின் மேல்தளமே ஆக இருக்கலாம். இதற்குள் மறைந்திருக்கும் இன்னும் பல கொடூர உண்மைகள் வெளியில் வராமல் இருக்கக்கூடும்.