ஒரே நாளில் ஏழு வாகனங்களில் பக்தர்களுக்கு அருள்புரியும் மலையப்ப சுவாமி – தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு
திருப்பதி திருமலையில் அமைந்துள்ள ஸ்ரீ ஏழுமலையான் திருக்கோயிலில், வரும் ஜனவரி 25ஆம் தேதி ரத சப்தமி உற்சவம் விமரிசையாக நடத்தப்பட உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சூரிய ஜெயந்தி நாளன்று திருப்பதி திருமலையில் ரத சப்தமி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தொடர்ந்து 9 நாட்கள் நடைபெறும் இந்த விழா, ‘மினி பிரம்மோற்சவம்’ என பக்தர்களால் போற்றப்படுகிறது. இந்த ஆண்டுக்கான ரத சப்தமி விழா, ஜனவரி 25ஆம் தேதிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அன்று, மலையப்ப சுவாமி ஒரே நாளில் ஏழு வகையான வாகனங்களில் மாட வீதிகளில் உலா வந்து, திரளான பக்தர்களுக்கு அருளாசி வழங்குவார். இந்த விசேஷ உற்சவத்தில் கலந்து கொள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதிக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு, கீழ் திருப்பதியில் ஜனவரி 24 முதல் 26ஆம் தேதி வரை இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படாது என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.