ஈரானை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் திட்டம்? – மத்திய கிழக்கில் போர் தயார் நிலை
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா தனது ராணுவப் படைகளை அதிக அளவில் நிலைநிறுத்தி வருகிறது. இதன் காரணமாக, எந்த நேரத்திலும் ஈரானை நோக்கி அமெரிக்கா தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் உலக நாடுகளிடையே அதிகரித்துள்ளது.
இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள முக்கியமான அமெரிக்க–பிரிட்டன் கூட்டு ராணுவத் தளமான டியாகோ கார்சியா, B-2, B-52 போன்ற நீண்ட தூர குண்டுவீச்சு விமானங்களின் நடவடிக்கைகளுக்கான முக்கிய மையமாக விளங்குகிறது.
அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான நான்கு C-17A குளோப்மாஸ்டர் III கனரக சரக்கு விமானங்கள், தற்போது டியாகோ கார்சியா தளத்தை நோக்கி பறந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சி-141 ஸ்டார்லிஃப்டரின் மாற்றாக உருவாக்கப்பட்ட சி-17 விமானம், நவீன வான்வழி போக்குவரத்துக்காக வடிவமைக்கப்பட்டதாகும். இது சுமார் 1,70,900 பவுண்டுகள் எடையுள்ள சரக்குகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டதுடன், குறுகிய மற்றும் தார் போடப்படாத ஓடுபாதைகளிலும் இயங்கக் கூடிய வசதி பெற்றதாகும்.
விமான இயக்கக் கண்காணிப்பு தரவுகளின் அடிப்படையில், RCH183 மற்றும் RCH181 என அழைக்கப்படும் இரண்டு அமெரிக்க C-17A விமானங்கள், பிரிட்டனில் உள்ள RAF லேகன்ஹீத் விமானப்படைத் தளத்திலிருந்து புறப்பட்டு மத்திய தரைக்கடல் வழியாக நகர்ந்து வருகின்றன.
இதனிடையே, USS Spruance, USS Michael Murphy என்ற அழிப்புக் கப்பல்களுடன் இணைந்து, அமெரிக்க விமானந்தாங்கி கப்பலான USS Abraham Lincoln, மத்திய கிழக்கு பகுதியை நோக்கி முன்னேறி வருகிறது.
மேலும், F-15 போர் விமானங்கள், பேட்ரியாட் ஏவுகணை அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு ராணுவ உபகரணங்களும் அந்தப் பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளன.
ஈரானில் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி தலைமையிலான ஆட்சிக்கு எதிராக கடந்த டிசம்பர் 28 முதல் நடைபெற்றுவரும் போராட்டங்களில் பலர் உயிரிழந்ததாகவும், ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் பின்னணியில், ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு வலுப்பெற்று வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 12 F-15 போர் விமானங்கள் ஜோர்டான் நாட்டை வந்தடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அபுதாபியில் இருந்து புறப்பட்ட சில விமானங்கள், ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பஹ்ரைன் ஆகிய நாடுகளுக்கு அருகிலுள்ள ஓமன் வளைகுடா மற்றும் பாரசீக வளைகுடா பகுதிகளில் பறந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அவை எதை இலக்காகக் கொண்டு பறக்கின்றன என்பது தெளிவாக இல்லை.
நான்கு வான்வழி எரிபொருள் நிரப்பும் டேங்கர் விமானங்களுடன் இணைந்து, சுமார் 15 அமெரிக்க F-15 போர் விமானங்கள் பிரிட்டனிலிருந்து ஜோர்டானில் தரையிறங்கியுள்ளன. இதே நேரத்தில், மூன்று கூடுதல் F-35I Adir ஸ்டெல்த் போர் விமானங்கள் நெவாடிம் விமானப்படைத் தளத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. மேலும், அமெரிக்க விமானந்தாங்கித் தாக்குதல் கப்பல் ஒன்று மலாக்கா ஜலசந்தியைக் கடந்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியை குறிவைக்கும் எந்தவொரு நடவடிக்கையும் நேரடி போராகவே கருதப்படும் என ஈரான் எச்சரித்துள்ள நிலையில், அதற்கு பதிலளிக்கும் விதமாக அமெரிக்கா இந்த ராணுவ குவிப்பை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அமெரிக்க தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுத்தால், அதனை எதிர்கொள்ள இஸ்ரேல் முழுமையாக தயாராக இல்லை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடல் வழித் தாக்குதல்களுடன் மட்டுமல்லாமல், வான்வழி மற்றும் தரைவழி நடவடிக்கைகளையும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்காக, ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் நவீன போர் விமானங்கள் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களில் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளன.
“போர் தயார் நிலை” என அழைக்கப்படும் இந்த நடவடிக்கையின் மூலம், அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்ட சில நொடிகளிலேயே ஈரானின் முக்கிய இலக்குகளை அமெரிக்க படைகள் தாக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.