நாடாளுமன்றத்தில் புதிய நடைமுறை – சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு
இனி மக்களவை உறுப்பினர்கள் தங்களது இருக்கைகளில் அமர்ந்த பிறகே, வருகை பதிவை மேற்கொள்ள முடியும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
வரும் 28ஆம் தேதி நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் ஆரம்பமாக உள்ள நிலையில், பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் செய்தியாளர்களை சந்தித்த ஓம் பிர்லா, எம்பிக்கள் வருகையை பதிவு செய்வதற்காக நாடாளுமன்ற வளாகங்களில் ஒரே நேரத்தில் திரளுவதால் அதிக நெரிசல் ஏற்படுவதாகவும், இதனை தவிர்க்கும் நோக்கில் புதிய செயல்முறை கொண்டு வரப்பட உள்ளதாகவும் விளக்கினார்.
அதன்படி, உறுப்பினர்கள் தங்களது இருக்கைகளில் அமர்ந்தவுடன், மேஜையில் பொருத்தப்பட்டுள்ள நவீன மின்னணு சாதனங்களின் மூலம் வருகையை பதிவு செய்யலாம் என அவர் கூறினார்.
இந்த புதிய நடைமுறை, வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே அமல்படுத்தப்பட உள்ளதாகவும் சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார்