கம்பிகள் தேவையில்லை – காற்றின் வழியே மின்சாரம் அனுப்பும் புரட்சிகர தொழில்நுட்பம்
மின்கம்பிகளை பயன்படுத்தாமல், காற்றின் வழியே நேரடியாக மின்சாரத்தை கடத்தும் நவீன தொழில்நுட்பத்தை ஃபின்லாந்து விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இது உலக மின் விநியோகத் துறையில் ஒரு முக்கிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.
மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து, ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மின்சாரத்தை கொண்டு செல்ல உலோகக் கம்பிகளே பிரதானமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மின்சாரம் நீர்மின், காற்றாலை, சூரிய ஆற்றல், அணுமின் போன்ற பல்வேறு வழிகளில் உற்பத்தி செய்யப்பட்டாலும், மின் கடத்தலுக்கான அடிப்படை அமைப்பு மாற்றமின்றியே இருந்து வந்தது. இந்த நீண்ட கால வழக்கத்தை மாற்றும் வகையில், ஃபின்லாந்து ஆராய்ச்சியாளர்கள் தொழில்நுட்ப ரீதியாக ஒரு பெரும் முன்னேற்றத்தை நிகழ்த்தியுள்ளனர்.
இந்த கண்டுபிடிப்பை ஃபின்லாந்தின் ஹெல்சிங்கி பல்கலைக்கழகம் மற்றும் ஒலூ (OULU) பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இணைந்து உருவாக்கியுள்ளனர். அவர்கள் காற்றின் வழியே மின்சாரத்தை பாதுகாப்பாகவும் துல்லியமாகவும் செலுத்தும் புதிய முறையை கண்டறிந்துள்ளனர். இதில் முக்கிய பங்கு வகிப்பது அதிக சக்தி கொண்ட அல்ட்ராசோனிக் ஒலி அலைகள் ஆகும்.
இந்த ஒலி அலைகள் காற்றில் கண்ணுக்குப் புலப்படாத ஒரு நேரான பாதையை உருவாக்குகின்றன. அந்த பாதையில் குறிப்பிட்ட அழுத்த நிலை உருவாகி, மின்சாரம் சிதறாமல் ஒரே திசையில் பயணிக்கச் செய்யப்படுகிறது. இது ஒரு மறைமுக மின்கம்பி போல செயல்படுவதால், இந்த முறைக்கு “அகூஸ்டிக் வைர்” (Acoustic Wire) என்று விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர்.
இதோடு மட்டுமல்லாமல், ஒளியை பயன்படுத்தி மின்சாரத்தை கடத்தும் தொழில்நுட்பத்திலும் ஃபின்லாந்து முன்னேற்றம் கண்டுள்ளது. “பவர்-பை-லைட்” (Power by Light) என அழைக்கப்படும் இந்த முறையில், உயர் திறன் கொண்ட லேசர் கதிர்கள் மூலம் மின்சாரம் தொலைதூரத்தில் உள்ள பெறுநர் கருவிகளுக்கு அனுப்பப்படுகிறது.
அணுமின் நிலையங்கள், உயர் மின்னழுத்த மையங்கள் போன்ற ஆபத்தான பகுதிகளில் கம்பிகள் வழியாக மின்சாரம் செலுத்துவது பெரும் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும். அந்த இடங்களில் லேசர் அடிப்படையிலான மின் கடத்தல் முறைகள் பாதுகாப்பான மாற்றாக கருதப்படுகின்றன. இதன் மூலம் மின்சார அதிர்ச்சி ஏற்படும் வாய்ப்பும் குறைகிறது.
இதற்குச் சமமாக, காற்றில் ஏற்கனவே பரவி வரும் ரேடியோ அலைகளை மின்சாரமாக மாற்றும் தொழில்நுட்பமும் உருவாகி வருகிறது. இது “பவர்-க்கு வைஃபை” (Wi-Fi for Power) என அழைக்கப்படுகிறது. இந்த முறையின் மூலம், கோடிக்கணக்கான சிறிய சென்சார் கருவிகள் காற்றிலிருந்தே தேவையான மின்சாரத்தை பெற முடியும். தனித்தனியாக பேட்டரிகளை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லாததால், சுற்றுச்சூழல் மாசுபாடும் குறிப்பிடத்தக்க அளவில் குறையும்.
தற்போது இந்த அனைத்து தொழில்நுட்பங்களும் ஆய்வகச் சோதனை மற்றும் ஆரம்ப நிலை பயன்பாட்டில் இருந்தாலும், எதிர்காலத்தில் உலகளாவிய மின் உள்கட்டமைப்பை முற்றிலும் மாற்றும் திறன் கொண்டவை என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
இன்றைய வயர்லெஸ் சார்ஜிங் முறைகள் பெரும்பாலும் மின்காந்த புலங்களை அடிப்படையாகக் கொண்டவை. ஆனால் ஃபின்லாந்து விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள இந்த முறை, செயல்பாட்டில் வைஃபை தொழில்நுட்பத்தை ஒத்ததாக உள்ளது. ஹெல்சிங்கி பல்கலைக்கழக ஆய்வுகள் கூறுவதாவது, காந்த வளைய ஆண்டனாக்களை பயன்படுத்தி குறைந்த தூரங்களில் அதிக திறனுடன் வயர்லெஸ் முறையில் மின்சாரம் அனுப்ப முடியும் என்பதாகும்.
ஒரு வைஃபை ரூட்டர் போல செயல்படும் இந்த அபார கண்டுபிடிப்பு, எதிர்காலத்தில் வீடுகள், தொழிற்சாலைகள் மற்றும் நகரங்களின் மின் விநியோக முறையையே மாற்றக்கூடும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் ஃபின்லாந்தின் இந்த புதிய தொழில்நுட்ப வளர்ச்சியை மிகுந்த கவனத்துடன் கண்காணித்து வருகின்றன.