ஒரு வைரல் வீடியோ… முடிவில் ஒரு இளைஞரின் உயிரிழப்பு
சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோ, இளைஞர் ஒருவரின் உயிரை பறித்த சம்பவமாக மாறி, கேரளாவில் பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவை வெளியிட்ட இளம்பெண் தலைமறைவாகியுள்ள நிலையில், காவல்துறை விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் வடகரா பகுதியைச் சேர்ந்த ஷிம்ஜிதா முஸ்தபா என்பவர், அண்மையில் சமூக ஊடகத்தில் ஒரு காணொளியை பதிவேற்றினார். பேருந்தில் பயணித்தபோது, ஒரு நபர் தவறான எண்ணத்துடன் தன்னைத் தொட்டதாகக் கூறி, அந்த நபரின் முகம் தெளிவாகத் தெரியும் வகையில் வீடியோவையும் அவர் பகிர்ந்திருந்தார்.
இந்த காணொளி குறுகிய நேரத்திலேயே வைரலாகி, 23 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றது. இந்நிலையில், அந்த வீடியோவில் குற்றம்சாட்டப்பட்ட நபரான கோழிக்கோடு மாவட்டம் கோவிந்தபுரத்தைச் சேர்ந்த தீபக் என்பவரின் கவனத்திற்கும் அந்த பதிவு சென்றடைந்தது.
தனியார் ஜவுளி நிறுவனத்தில் பணியாற்றி வந்த தீபக், சமூக வலைதளங்களில் தன்னை குற்றவாளியாக சித்தரித்த இந்த வீடியோவை பார்த்து கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறப்படுகிறது. தான் குற்றம் செய்யவில்லை என்பதை உறவினர்கள் மற்றும் சுற்றத்தாரிடம் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் சிக்கியதால், அவர் மன அழுத்தத்தில் மூழ்கினார்.
இந்த மன வேதனையைத் தாங்க முடியாமல், கடந்த 17ஆம் தேதி இரவு தனது படுக்கை அறையில் தூக்கிட்டு தீபக் தற்கொலை செய்து கொண்டார். மறுநாள் காலை நீண்ட நேரமாக அறை திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அவர் உயிரிழந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது.
இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததுடன், வீடியோ வைரலாக வேண்டும் என்ற நோக்கத்திலேயே அந்த பெண் அதை சமூக வலைதளத்தில் பதிவிட்டாரா என்ற கேள்விகள் எழுந்தன. குற்றச்சாட்டு உண்மைதானா, அல்லது பொய்யானதா என்பது குறித்து கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், ஒரு சமூக ஊடகப் பதிவு ஒருவரை உயிரை மாய்த்துக்கொள்ளும் நிலைக்கு தள்ளியிருப்பது பெரும் சர்ச்சையாக மாறியது.
இதனைத் தொடர்ந்து, வீடியோ வெளியிட்ட ஷிம்ஜிதா முஸ்தபாவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கண்டனக் குரல்கள் வலுத்தன. அதன்பின், அவர் தனது சமூக ஊடக கணக்குகளை முடக்கிவிட்டு தலைமறைவானார்.
ஆரம்பத்தில் காவல்துறை, இந்த மரணத்தை இயற்கைக்கு மாறான மரணம் எனப் பதிவு செய்திருந்தது. ஆனால், தீபக்கின் தாயார் கன்யகா அளித்த புகாரின் அடிப்படையில், அந்த இளம்பெண்ணுக்கு எதிராக தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளில் கோழிக்கோடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இத்தகைய துயரமான சம்பவங்கள் இனிமேல் எவருக்கும் நேரக்கூடாது என தீபக்கின் உறவினர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். தீபக் அமைதியான, ஒழுக்கமான வாழ்க்கை வாழ்ந்தவர் என்றும், இதுவரை யாரிடமும் பிரச்சினை செய்ததில்லை என்றும் அவரது தந்தை கண்ணீருடன் கூறினார். சமூக அவமானத்தை தாங்க முடியாததாலேயே தனது மகன் இந்த கடும் முடிவை எடுத்துக் கொண்டதாகவும் அவர் கதறினார்.
மேலும், சமூக ஊடகங்களில் தங்கள் மகனை குறிவைத்து இவ்வளவு பெரிய விவாதமும் விமர்சனமும் நடைபெறுகிறது என்பது சம்பவம் நடந்த பின்னரே தங்களுக்கு தெரியவந்ததாக தீபக்கின் பெற்றோர் தெரிவித்தனர்.
இந்த வழக்கை கவனத்தில் எடுத்த மனித உரிமைகள் ஆணையம், காவல்துறை முழுமையான விசாரணை நடத்தி ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என கேரள வடக்கு மண்டல டிஐஜி-க்கு உத்தரவிட்டுள்ளது. பிப்ரவரி 19ஆம் தேதி கோழிக்கோட்டில் விசாரணை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தீபக்கின் குடும்பத்திற்கு சட்டரீதியான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக ஆல் கேரளா மென்ஸ் அசோசியேஷன் அறிவித்துள்ளது.
தலைமறைவாக உள்ள ஷிம்ஜிதா முஸ்தபாவின் செல்போன் தற்போது அணைக்கப்பட்ட நிலையில், அவரை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும், அவரது செல்போனை கைப்பற்றி, அந்த வீடியோ எவ்விதமாகத் திருத்தப்பட்டதா அல்லது சிதைக்கப்பட்டதா என்பதையும் தொழில்நுட்ப ஆய்வுக்கு உட்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன், சம்பவ நாளில் அந்த பேருந்தில் பயணம் செய்த பயணிகள் மற்றும் நடத்துநரிடமும் வாக்குமூலம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விசாரணை தீவிர கட்டத்தில் உள்ள நிலையில், இந்த வழக்கில் உண்மை வெளிவந்து, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நியாயம் கிடைக்குமா என்பது விரைவில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.