உறைபனி சூழலில் ரீல்ஸ் படமாக்கல் – அதிர்ச்சியளித்த சம்பவம்
கடும் பனிச்சூழலில் ரீல்ஸ் வீடியோ பதிவு செய்த இன்ஸ்டாகிராம் பிரபலப் பெண் திடீரென மயங்கி விழுந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.
இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் ஆயிரக்கணக்கான பின்தொடர்பவர்களை கொண்ட இரண்டு இளம்பெண்கள், பார்வையாளர்களை ஈர்க்கும் நோக்கில், கடும் பனிப்பொழிவு நிலவிய இடத்தில் சேலை அணிந்து நடனமாடியபடி ரீல்ஸ் வீடியோ பதிவு செய்துள்ளனர்.
அந்த நேரத்தில், அவர்களில் ஒருவருக்கு ஆக்சிஜன் அளவு குறைந்ததால் தலைசுற்றல், தீவிர தலைவலி மற்றும் திடீர் மயக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு பெண், அவரது கையைப் பிடித்துக்கொண்டு வலியால் துடிக்கும் காட்சிகளும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவத்தை பதிவு செய்த காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி, பல்வேறு தரப்பினரிடமிருந்து கடுமையான விமர்சனங்களையும் எதிர்ப்புகளையும் சந்தித்து வருகிறது.