ஜன நாயகன் திரைப்படம் – தணிக்கை சான்று வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
ஜன நாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவது தொடர்பான வழக்கில், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் பின்னூட்டியுள்ளது.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ஜன நாயகன் படத்தை மீண்டும் பரிசீலனை செய்ய தயாரிப்பு நிறுவனத்திடம் கால அவகாசம் கோரியதாக தெரிவித்தனர். மேலும், மறுதணிக்கை நடவடிக்கைக்கு கூடுதலாக 20 நாட்கள் தேவைப்படும் என்றும் நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
மேலும், மறுதணிக்கைக்குப் பிறகும் தங்கள் தரப்பில் தாமதம் ஏற்பட்டால், தயாரிப்பு நிறுவனம் மீண்டும் நீதிமன்றத்தை அணுகலாம் எனவும், இந்த வழக்கு தொடரப்படாமல் இருந்திருந்தால் திரைப்படம் இதற்குள் வெளியாகியிருக்கும் என்றும் தணிக்கை வாரியம் சார்பில் வாதிடப்பட்டது.
இதற்கு பதிலளித்த பட தயாரிப்பு நிறுவனத்தின் வழக்கறிஞர், மறுதணிக்கை குறித்து தணிக்கை வாரியம் முறையான அறிவிப்போ அல்லது தொடர்போ மேற்கொள்ளவில்லை எனக் குறிப்பிட்டார். டிசம்பர் 29ஆம் தேதிக்குப் பின்னர் நடைபெறும் நடவடிக்கைகள் அனைத்தும் தங்களிடமிருந்து மறைக்கப்பட்டுள்ளதாகவும், தணிக்கை நடைமுறையில் வெளிப்படைத்தன்மை இல்லாதது விதிமீறலாக கருதப்பட வேண்டும் என்றும் வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கவனமாக கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக அறிவித்தனர்.