சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கத் திருட்டு விவகாரம்: பெங்களூரு, பெல்லாரி உள்ளிட்ட பகுதிகளில் ED அதிரடி சோதனை
சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக, பெங்களூரு மற்றும் பெல்லாரி உள்ளிட்ட பல இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோயிலில் இருந்து சுமார் 4.5 கிலோ தங்கம் காணாமல் போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கின் பின்னணி குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, பல்வேறு நகரங்களில் உள்ள சந்தேக நபர்களின் இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
இந்த வழக்கின் முக்கிய நபராக கருதப்படும் உன்னிகிருஷ்ணனுடன் தொடர்புடைய அறங்காவலர்களின் வீடுகளிலும், பெல்லாரியில் செயல்பட்டு வரும் நகைக்கடை உரிமையாளர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வழக்கில் பெரும் அளவிலான நிதி முறைகேடு இடம்பெற்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை விசாரணையை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.