பாலிவுட்டில் மத சார்ந்த பாகுபாடா?
ஏ.ஆர்.ரஹ்மானின் கருத்தால் எழுந்த சர்ச்சை – விரிவான செய்தி தொகுப்பு
பாலிவுட் திரையுலகில் மத அடிப்படையிலான பாரபட்சம் இருப்பதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்த கருத்து, சினிமா வட்டாரங்களில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது. அவரது இந்த பேட்டிக்கு கங்கனா ரனாவத் உள்ளிட்ட பல பிரபலங்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்திய நிலையில், தற்போது ஏ.ஆர்.ரஹ்மான் தானே தனது நிலைப்பாட்டை விளக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த சர்ச்சையின் முழு பின்னணியை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
சமீபத்தில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், BBC Asian Network-க்கு அளித்த பேட்டியில், சத்ரபதி சம்பாஜி மகாராஜின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவான ‘சாவா’ திரைப்படம் குறித்த தனது அனுபவங்களை பகிர்ந்தார். அந்த படத்தைப் பற்றி பேசுகையில், அது சமூகத்தைப் பிரிக்கும் வகையிலான கருத்துகளை முன்வைத்து, அதன்மூலம் வருமானம் ஈட்டியதாக தான் உணர்ந்ததாக ரஹ்மான் கூறினார்.
மேலும், ‘ரோஜா’, ‘பாம்பே’, ‘உயிரே’ போன்ற படங்களுக்கு இசையமைத்த காலத்தில், இந்தி திரைப்படத் துறையில் தன்னை ஒரு வெளியாளாகவே உணர்ந்ததாகவும் அவர் தெரிவித்தார். இதற்கான காரணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, இந்தி மொழியில் தன்னை வெளிப்படுத்த முடியாததே அதற்கு காரணமாக இருக்கலாம் என்றும், தமிழர்களுக்கு இந்தி கற்றுக்கொள்வது எளிதான விஷயம் அல்ல என்றும் ரஹ்மான் விளக்கினார். தமிழ்மொழி மற்றும் கலாச்சாரத்தின் மீது தங்களுக்கு ஆழ்ந்த பற்று இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த எட்டு ஆண்டுகளாக தன்னிடம் திரைப்பட வாய்ப்புகள் குறைந்துள்ளதாகவும், திரைத்துறை இப்போது சமூகக் குழுக்கள் மற்றும் அதிகார மையங்களைச் சுற்றியே இயங்கும் சூழலாக மாறியுள்ளதாகவும் அவர் விமர்சித்தார். இசைத்துறையின் முடிவுகளை எடுக்கும் இடங்களில் படைப்பாற்றல் இல்லாதவர்கள் ஆதிக்கம் செலுத்துவது தான் இந்த நிலைக்கு காரணமாக இருக்கலாம் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.
இந்த பேட்டி வெளியானதைத் தொடர்ந்து, பாலிவுட்டில் மத சார்ந்த பாகுபாடு உள்ளது என்ற ரஹ்மானின் கருத்து பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதற்கு எதிர்வினை அளித்த கவிஞரும் திரைக்கதை ஆசிரியருமான ஜாவேத் அக்தர், ரஹ்மானின் பார்வையை தாம் ஏற்கவில்லை என்றும், இந்தி திரையுலகம் சமூக அடிப்படையில் இயங்குகிறது என்ற கருத்துடன் தாம் உடன்படவில்லை என்றும் தெரிவித்தார்.
இதனிடையே நடிகை கங்கனா ரனாவத், ரஹ்மானை கடுமையாக விமர்சித்தார். ‘எமர்ஜென்சி’ திரைப்படம் தொடர்பாக அவரை சந்திக்க முயன்ற போது, ரஹ்மான் சந்திக்க மறுத்ததாகவும், விளம்பரப் பணிகளில் ஈடுபட முடியாது என கூறியதாகவும் கங்கனா குற்றம்சாட்டினார். தனது அனுபவத்தின் அடிப்படையில், ஏ.ஆர்.ரஹ்மான் பாரபட்சமும் வெறுப்பும் கொண்டவர் என அவர் கடும் விமர்சனம் செய்தார்.
எழுத்தாளர் ஷோபா டே, பாடகர் ஷான் உள்ளிட்ட பலரும் ரஹ்மானின் கருத்துகளை எதிர்த்து பேசினர். அதே நேரத்தில், ஜம்மு–காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெக்பூபா முக்தி, பின்னணி பாடகி சின்மயி உள்ளிட்டோர், ரஹ்மானின் பார்வைக்கு ஆதரவு தெரிவித்து கருத்து பகிர்ந்தனர்.
இந்த விவாதங்கள் தீவிரமடைந்த நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் தானே ஒரு வீடியோ வெளியிட்டு தனது நிலைப்பாட்டை விளக்கியுள்ளார். “சில சமயங்களில் நமது நோக்கம் தவறாக புரிந்து கொள்ளப்படலாம் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால், இசையின் வழியாக கலாச்சாரங்களை இணைப்பதும், உயர்த்துவதும்தான் எனது குறிக்கோள். யாரையும் காயப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் இல்லை” என அவர் தெளிவுபடுத்தினார்.
மேலும், இந்தியராக இருப்பதில் பெருமை கொள்வதாகவும், கருத்து சுதந்திரத்திற்கு இந்தியா எப்போதும் இடமளிக்கும் நாடாக இருப்பதாகவும் ரஹ்மான் கூறினார். பிரதமர் மோடி முன்னிலையில் பல்வேறு இசைக்குழுக்களுடன் இணைந்து நிகழ்ச்சி நடத்தியதும், ‘ராமாயண’ திரைப்படத்திற்கு இசையமைத்ததும் இதற்கு உதாரணம் என அவர் சுட்டிக்காட்டினார்.
“இந்தியாதான் எனது ஊக்கம். இந்தியாதான் எனது குரு. இந்தியாதான் எனது வீடு” என உருக்கமாக பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், “ஜெய் ஹிந்த்… ஜெய் ஹோ” என்ற வார்த்தைகளுடன் அந்த வீடியோவை நிறைவு செய்துள்ளார்.