இந்தியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பது குறித்து 21ம் தேதிக்குள் முடிவு: வங்கதேசத்துக்கு ஐசிசி கெடு
இந்தியாவில் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் கலந்து கொள்வதா இல்லையா என்பது குறித்த தங்களின் இறுதி முடிவை வரும் 21ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என வங்கதேச அணிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) காலக்கெடு நிர்ணயித்துள்ளது.
ஐபிஎல் 2026 ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்ட வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மானை, பிசிசிஐ வழங்கிய அறிவுறுத்தலின் அடிப்படையில் அந்த அணி விடுவித்தது. இந்த நடவடிக்கை வங்கதேச அரசு மற்றும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதன் தொடர்ச்சியாக, இந்தியாவில் நிலவும் பாதுகாப்பு சூழல் தங்களுக்கு உகந்ததாக இல்லை என்றும், தங்கள் அணி விளையாட வேண்டிய போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்தது.
ஆனால், போட்டிகளுக்கான அட்டவணை ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, டிக்கெட் விற்பனை மற்றும் தங்கும் வசதிகளுக்கான முன்பதிவுகள் நிறைவடைந்துள்ளதால், போட்டி இடங்களை மாற்ற இயலாது என ஐசிசி தெளிவாக தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், வங்கதேச அணி இந்தியா வர மறுத்தால், அவர்கள் விளையாட வேண்டிய போட்டிகளுக்கான புள்ளிகளை இழக்கும் நிலை உருவாகும் என்றும், 21ம் தேதிக்குள் தங்கள் முடிவை அறிவிக்கத் தவறினால், அந்த அணியை தொடரிலிருந்து நீக்க நேரிடும் என்றும் ஐசிசி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.