இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ரூ.22 கோடிக்கு மேல் அபராதம்
நாட்டின் முக்கிய தனியார் விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோவிற்கு ரூ.22 கோடியே 20 லட்சம் அபராதம் விதித்து மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த மாதம் இண்டிகோ நிறுவனம் பெருமளவில் விமான சேவைகளை ரத்து செய்ததன் காரணமாக, பயணிகள் கடும் சிரமங்களுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களின் பணி நேரத்தை வரம்புக்கு மீறி பயன்படுத்தியது, மாற்று ஏற்பாடுகள் முறையாக செய்யப்படாதது மற்றும் நிர்வாக குறைபாடுகள் ஆகியவை இந்த நிலைக்கு காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது.
இதன் விளைவாக சுமார் 2,500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு, டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் லட்சக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களிலேயே நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இந்த விவகாரங்களை ஆய்வு செய்த வான்வழி போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம், இண்டிகோ நிறுவனத்தின் தவறுகளை உறுதி செய்து ரூ.22.20 கோடி அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது.