அனுமன் சிலையை 36 மணி நேரத்துக்கும் மேலாக சுற்றிய தெரு நாய் – பக்தர்கள் வியப்பு
உத்தரபிரதேச மாநிலத்தில், அனுமன் சிலையை தொடர்ந்து 36 மணி நேரத்துக்கும் மேலாக சுற்றி வந்த ஒரு தெரு நாய், பக்தர்கள் மற்றும் கிராம மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பான காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி வைரலாகி வருகின்றன.
பிஜ்னோர் மாவட்டம் நாகினா பகுதியைச் சேர்ந்த நந்த்பூர் கிராமத்தில் அமைந்துள்ள பழமையான அனுமன் கோயிலுக்கு வந்த அந்த தெரு நாய், அனுமன் சிலையை இடதுபுறமாக பலமுறை சுற்றி வந்ததாக கூறப்படுகிறது.
நாய் நீண்ட நேரம் உணவும், தண்ணீரும் அருந்தாமல் தொடர்ந்து கோயிலைச் சுற்றி வந்ததை கண்ட கிராம மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே, இரண்டு நாட்கள் கழித்து அதே நாய் துர்க்கை அம்மன் கோயிலையும் சுற்றி வரத் தொடங்கியது. நீண்ட நேர அலைச்சலால் சோர்வடைந்த நாய் பின்னர் ஓரிடத்தில் படுத்து ஓய்வெடுத்தது.
இந்த நிகழ்வை சிலர் தெய்வீக அடையாளமாக கருதி, அந்த நாயை சாமியின் வடிவம் என நம்பி வழிபடத் தொடங்கினர். இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்களின் கவனமும் அதிகரித்தது.
இச்சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வரும் நிலையில், நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். ஒருபுறம் அதிசயமாக பார்க்கும் மக்கள் இருக்க, மறுபுறம் உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும் அந்த நாய்க்கு சிகிச்சை அளிக்காமல் வழிபாடு செய்வது சரியா என சிலர் விமர்சனமும் முன்வைத்துள்ளனர்.