அழகர் பெருமாள் கோயிலில் பக்தர்கள் மீது வாழைப்பழம் வீசும் பாரம்பரிய விழா
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே அமைந்துள்ள சோலைமலை அழகர் பெருமாள் கோயிலில், வாழைப்பழங்களை பக்தர்கள் மீது வீசும் பாரம்பரிய திருவிழா மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றது.
சேவுகம்பட்டி கிராமத்தில் உள்ள இக்கோயிலில், முதலில் பெருமாளுக்கு சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து, பல்வேறு வகை வாழைப்பழங்களை ஆண்கள் மட்டுமே தலையில் சுமந்து, கோயிலைச் சுற்றி ஊர்வலமாக கொண்டு வந்தனர்.
சன்னிதியை அடைந்த வாழைப்பழங்கள், பின்னர் கோபுர வாசல் முன்பாக எடுத்துவரப்பட்டு, அங்கு திரண்டிருந்த பக்தர்கள் மீது வீசப்பட்டன.
பக்தர்கள் தங்கள் மீது விழுந்த வாழைப்பழங்களை இறை அருளாகக் கருதி பிரசாதமாக ஏற்றுக்கொண்டு, அவற்றை வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர்.