பொற்கோயில் புனித குளத்தில் இளைஞரின் செயல் சர்ச்சை – மன்னிப்பு கோரி வெளியான வீடியோ வைரல்
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் அமைந்துள்ள சீக்கியர்களின் புனித தலமான பொற்கோயிலில் நிகழ்ந்த ஒரு சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கோயிலின் புனித குளமான அமிர்த சரோவரில், சுபான் ரங்ரீஸ் என்ற இஸ்லாமிய இளைஞர் கால்களை சுத்தம் செய்து, நீரை வாயில் வைத்து கொப்பளித்து அங்கேயே துப்பியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவியதை தொடர்ந்து, சீக்கிய மத மரபுகள் மற்றும் நம்பிக்கைகளுக்கு எதிரான செயல் என பலர் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.
சர்ச்சை அதிகரித்த நிலையில், சம்பந்தப்பட்ட இளைஞர் தனது தவறை ஒப்புக்கொண்டு, மன்னிப்பு கோரும் வகையில் தனியான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், நீண்ட காலமாக பொற்கோயிலுக்கு செல்ல வேண்டும் என்ற விருப்பம் இருந்ததாகவும், ஆனால் அங்குள்ள வழிபாட்டு ஒழுங்குமுறைகள் குறித்து தனக்கு தெளிவான அறிவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், தாம் தமது மத வழக்கப்படி நடந்துகொண்டதாக நினைத்ததாகவும், சீக்கிய சமூகத்தின் உணர்வுகளை புண்படுத்த வேண்டும் என்ற நோக்கம் எவ்விதத்திலும் இல்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
இந்த மன்னிப்பு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.