காசி தமிழ் சங்கமம் நினைவுகள் – மாணவனின் கடிதத்திற்கு பிரதமர் மோடி பாராட்டு
காசி தமிழ் சங்கமம் நிகழ்வில் பங்கேற்ற மாணவர் பகிர்ந்த அனுபவங்கள் பிரதமர் நரேந்திர மோடியின் பாராட்டைப் பெற்றுள்ளன.
கடந்த ஆண்டு நடைபெற்ற காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் பழனிவேல் என்ற மாணவர் கலந்துகொண்டார். ஒன்பது நாட்கள் தொடர்ந்து காசியில் தங்கியிருந்த அவர், அந்த பயணத்தின் அனுபவங்களையும் உணர்வுகளையும் பிரதமருக்கு கடிதமாக எழுதி தெரிவித்திருந்தார்.
இந்தக் கடிதத்திற்கு பதிலளித்த பிரதமர் மோடி, மாணவரின் காசி பயண அனுபவங்களை அறிந்து மகிழ்ச்சி அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இவ்வகையான இளம் பங்கேற்பாளர்கள், தங்களது அனுபவங்களின் மூலம் பிறரையும் ஊக்குவித்து, நாட்டின் ஒற்றுமை உணர்வை மேலும் வலுப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் மீது மாணவர் வெளிப்படுத்திய அன்புக்கும் ஈடுபாட்டுக்கும் நன்றி தெரிவித்த பிரதமர், அவரது எதிர்கால கல்வி மற்றும் வாழ்க்கை முயற்சிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
மேலும், இத்தகைய கடிதப் பரிமாற்றங்கள் கங்கை நதிக்கரையிலிருந்து தென்னிந்திய கடற்கரை வரை பரந்து விரிந்த இந்திய நாகரிகத்தின் உயிரோட்டமான ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் வலுவான சான்றுகளாக உள்ளன என்றும், பண்பாடு, ஆன்மிகம் மற்றும் இளைஞர்களின் பங்கு இணைந்து நாட்டின் எதிர்காலத்தை உருவாக்கி வருவதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.