“மலை டா… இது அண்ணாமலைடா!” – அண்ணாமலை பிரசாரத்தின் தாக்கம்: பாஜக வேட்பாளர் அபார வெற்றி
மும்பையில் பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளருக்கு, அண்ணாமலை மேற்கொண்ட தீவிர பிரசாரம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்துள்ளது.
மலாட் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 47-வது வார்டில் பாஜக வேட்பாளராக களமிறங்கிய தேஜிந்தர் திவானாவுக்கு ஆதரவாக, பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை மும்பையில் நேரடியாக பிரசாரம் செய்தார்.
வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகிய நிலையில், தேஜிந்தர் திவானா 13,858 வாக்குகள் என்ற கணிசமான முன்னிலையுடன் வெற்றி பெற்றுள்ளார்.
இந்த வெற்றியைப் பற்றி கருத்து தெரிவித்த அண்ணாமலை, எதிர்க்கட்சிகள் முன்னெடுத்த பிளவு அரசியலை மும்பை மக்கள் தெளிவாக நிராகரித்துள்ளதாக கூறினார்.
அண்ணாமலை வெளியிட்ட செய்திக் குறிப்பில், இந்த தேர்தல் முடிவு மும்பை மக்களின் தெளிவான தீர்ப்பாகும் என்றும், மகாயுதி கூட்டணி அரசின் செயல்பாடுகளுக்கு கிடைத்த மிகப்பெரிய மக்கள் ஆதரவாக இதை பார்க்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
மூன்று நிலைகளில் செயல்படும் நிர்வாக அமைப்பு மூலம், உள்ளாட்சி முதல் நாடாளுமன்றம் வரை ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டங்கள் பொதுமக்களை சென்றடைந்ததன் பிரதிபலிப்பே இந்த வெற்றி எனவும் அவர் விளக்கியுள்ளார்.
மொழி மற்றும் பிராந்திய அடையாளங்களை முன்வைத்து மும்பை மக்களிடையே பிளவை உருவாக்க எதிர்க்கட்சிகள் முயன்ற போதும், அந்த முயற்சிகளை மக்கள் உறுதியாக முறியடித்துள்ளனர் என்றும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.