புவிசார் அரசியலில் புதிய திசை – இந்தியாவுடன் நெருக்கம் அதிகரிக்கும் ஜெர்மனி
இந்தியா–ஜெர்மனி உறவு தற்போது வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு புதிய கட்டத்தை எட்டியுள்ளது. உலக அரசியல் சூழலில் வேகமாக மாறும் சக்தி சமநிலைகளுக்கிடையே, ரஷ்யாவின் அச்சுறுத்தல்களும், சீனாவின் நம்பகமற்ற அணுகுமுறைகளும் ஜெர்மனியை ஆசியாவின் முக்கிய வல்லரசான இந்தியாவுடன் நெருக்கமாக இணைவதற்கு தூண்டியுள்ளது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உருவான புதிய ஜெர்மனியை அங்கீகரித்த முதல் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது. 1951 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தியா–ஜெர்மனி தூதரக உறவுகள் தற்போது 75 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளன. அதே நேரத்தில், இருநாடுகளுக்கிடையிலான மூலோபாய மற்றும் வர்த்தக கூட்டாண்மையின் 25 ஆண்டுகளும் கொண்டாடப்படுகின்றன.
இந்த முக்கிய தருணத்தில், ஜெர்மனி அதிபர் ஃபிரெட்ரிக் மெர்ஸ், பதவியேற்ற பின்னர் முதன்முறையாக அதிகாரப்பூர்வ அரசு பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியுடன் அவர் நடத்திய உயர்மட்ட பேச்சுவார்த்தைகள், இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.
வர்த்தகம் மற்றும் முதலீடு, தொழில்நுட்பம், கல்வி, திறன் மேம்பாடு, இடம்பெயர்வு, பாதுகாப்பு, அறிவியல் மற்றும் ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில் நீண்டகால ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். மேலும், பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகளில் பரஸ்பர நலன்களை முன்னிறுத்தி கருத்துப் பரிமாற்றமும் இடம்பெற்றது.
கலாச்சாரத் தொடர்புகளை வலுப்படுத்தும் நோக்கில், சபர்மதி ஆற்றங்கரையில் நடைபெற்ற சர்வதேச பட்டம் விடும் விழாவில் இருநாட்டு தலைவர்களும் பங்கேற்றது, மக்களுக்கிடையேயான உறவுகளின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியது.
2024 ஆம் ஆண்டில் இந்தியா–ஜெர்மனி இடையிலான மொத்த வர்த்தகம் 33.40 பில்லியன் டாலரை எட்டியது. இதில் ஜெர்மனி 18.31 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களையும், இந்தியா 15.9 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களையும் ஏற்றுமதி செய்துள்ளன. இந்தியாவில் முதலீடு செய்யும் நாடுகளின் பட்டியலில் ஜெர்மனி ஒன்பதாவது இடத்தில் உள்ளது; கடந்த பத்தாண்டுகளில் அதன் முதலீடுகள் கணிசமாக உயர்ந்துள்ளன.
இந்திய-பசிபிக் பகுதியில் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு பயிற்சிகளை இருநாடுகளும் இணைந்து மேற்கொண்டு வருகின்றன. ‘மிலன்’, ‘தரங்’ போன்ற கூட்டுப் பயிற்சிகள் இந்த ஒத்துழைப்பின் முக்கிய அடையாளங்களாக விளங்குகின்றன. மேலும், இந்திய-பசிபிக் வரிசைப்படுத்தல் திட்டத்தின் கீழ் ஜெர்மன் கடற்படை கப்பல்கள் இந்தியாவுக்கு வரவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்புத் துறையில் தொழில்நுட்ப பகிர்வை எளிதாக்கும் வகையில், இந்தியாவுக்கான ஏற்றுமதி அனுமதி கட்டமைப்பை புதுப்பிக்கும் மசோதாவுக்கு கடந்த ஆண்டு ஜெர்மன் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் விமான மின்னணுவியல், சென்சார், மின்னணுப் போர் மற்றும் பாதுகாப்புத் தகவல் அமைப்புகளில் இருதரப்பு ஒத்துழைப்பு விரிவடைய உள்ளது. குறிப்பாக, இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் திறனை மேம்படுத்தும் ‘ப்ராஜெக்ட்–75I’ திட்டத்தின் கீழ், 72,000 கோடி ரூபாய் மதிப்பிலான டைப்–214 (214NG) நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கலாச்சார மற்றும் கல்வி உறவுகளின் அடிப்படையாக, இலக்கிய நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூர் ஜெர்மனிக்கு மேற்கொண்ட பயணங்கள் இன்றும் நினைவுகூரப்படுகின்றன. ஹைடெல்பெர்க், ஹம்போல்ட், பெர்லின், பான் போன்ற பல ஜெர்மன் பல்கலைக்கழகங்களில் இந்திய மொழிகள் மற்றும் இலக்கியப் பாடநெறிகள் தற்போது நடத்தப்பட்டு வருகின்றன.
மூன்று ஆண்டுகளாக பொருளாதார மந்தநிலையை எதிர்கொண்டு வரும் ஜெர்மனி, திறமையான தொழிலாளர்களுக்கான தேவை காரணமாக இந்தியர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கி வருகிறது. ஜெர்மனியில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் வாழ்ந்து வருவதுடன், 50,000க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் அந்நாட்டில் கல்வி பயின்று வருகின்றனர். இவர்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான அறிவுத் தூதுவர்களாக செயல்படுகின்றனர்.
ஆனால், இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் (BIT) இல்லாதது, தொழிலாளர் ஒழுங்குமுறைச் சிக்கல்கள், சர்வதேச விவகாரங்களில் வேறுபட்ட நிலைப்பாடுகள் மற்றும் ஷெங்கன் விசா நடைமுறைத் தாமதங்கள் போன்ற சவால்களும் உள்ளன.
இந்த தடைகள் இருந்தபோதிலும், பரஸ்பர நலன்களை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவும் ஜெர்மனியும் ஆழமான மற்றும் நீடித்த ஒத்துழைப்பை நோக்கி உறுதியாக முன்னேறி வருகின்றன.