டெல்லி கார் குண்டு தாக்குதல் வழக்கு – அல் பலா பல்கலைக்கழகத்தின் ரூ.140 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல்
டெல்லியில் நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணையில், அல் பலா பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான ரூ.140 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கியுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி, டெல்லி செங்கோட்டை அருகே நடந்த சக்திவாய்ந்த கார் குண்டு வெடிப்பில் 15 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த தாக்குதலை தற்கொலைப் படை முறையில் நடத்திய டாக்டர் உமர் என்பவர், அல் பலா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றியவர் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, அந்த கல்வி நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்தும் சந்தேகங்கள் எழுந்தன.
இதன் தொடர்ச்சியாக, அல் பலா பல்கலைக்கழகத்தில் நிதி முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையின் போது பல முக்கிய ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, பரிதாபாத் பகுதியில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான 54 ஏக்கர் பரப்பளவுள்ள நிலம், கல்வி கட்டிடங்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. இச்சொத்துகளின் மொத்த மதிப்பு சுமார் ரூ.140 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.