ஐஸ்லாந்தில் முதன்முறையாக கொசுக்கள் கண்டறியப்பட்டன
ஐஸ்லாந்து நாட்டில் முதன் முதலில் கொசுக்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் தலைநகருக்கு தென்-மேற்கில் அமைந்துள்ள ஜோஸ் (Kjós) பள்ளத்தாக்கு பகுதியில் இக்கொசுக்கள் காணப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், இதுவரை உலகில் கொசுக்கள் இல்லாத நாடாக ஐஸ்லாந்து கொண்டிருந்த தனிப்பட்ட இடத்தை இழந்துள்ளது. தற்போது, கொசுக்கள் இல்லாத மிகப்பெரிய பகுதி என்றால் அது அன்டார்டிக்கா ஆகும்.
ஜோஸ் பகுதியில் இரு பெண் கொசுக்கள் மற்றும் ஒரு ஆண் கொசு கண்டறியப்பட்டுள்ளதென அந்நாட்டின் பூச்சியியல் துறை நிபுணர் ஜோர்ன் ஹிஜால்டாசன் தெரிவித்துள்ளார். மேலும், இவை ‘Culiseta annulata’ இனத்தைச் சேர்ந்தவை மற்றும் கடும் குளிரும், பனிப்பாறைகளும் உள்ள சூழலிலும் பொழுதுபோக்கு செய்யும் வகை என அவர் கூறினார். இந்த இனக்கொசுக்கள் ஐரோப்பா மற்றும் வடக்கு ஆப்பிரிக்கா பகுதிகளில் பொதுவாக காணப்படுகின்றன. ஆனால், இவை ஐஸ்லாந்துக்கு எப்படி வந்தது என்பது இன்னும் தெரியவில்லை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐஸ்லாந்தில் இதுவரை கொசுக்கள் காணப்படாததற்கான காரணமாக, நாட்டின் கடும் குளிரும், நீர் தேங்காத நிலங்களும் கருதப்பட்டு வந்தது. ஆனால், இந்த ஆண்டு நாடு பல முறை அதிக வெப்பநிலை பதிவேற்றியுள்ளது.
மே மாதம், ஐஸ்லாந்தில் தொடர்ந்து 10 நாட்களுக்கும் மேலாக வெப்பநிலை 20°C-ஐ மீறியுள்ளதாகவும், ஒருமுறை 26.6°C வரை உயர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பனிப்பாறைகள் உருகி, கொசு பரவுவதற்கான சூழல் உருவானதாக அறியப்படுகிறது.
சில ஆய்வாளர்கள் கூறியதாவது:
“பொதுவாக, கொசுக்கள் கப்பல்கள் மற்றும் கன்டெய்னர்களின் மூலம் பிற நாடுகளிலிருந்து பரவும். எனவே, துறைமுகத்தில் இருந்து வந்திருக்கலாம் என கூறலாம். ஆனால், இந்த கொசுக்கள் ஒரு வீட்டின் தோட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால், இவை ஐஸ்லாந்தில் இன்னும் பரவியிருக்க வாய்ப்பு உள்ளது”
இப்போது, நாட்டில் கொசுக்கள் பரவுவதைப் பற்றிய விரிவான ஆய்வுகள் நடக்கின்றன.