இஸ்லாமிய நேட்டோ நோக்கி அசிம் முனீர்? – இந்திய பாதுகாப்புக்கு உருவாகும் புதிய அச்சம்
உலகின் இஸ்லாமிய நாடுகளுக்கான பாதுகாப்பு மையமாக பாகிஸ்தானை மாற்றும் முயற்சியில், அந்நாட்டு முப்படைகளின் தலைமைத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர் தீவிரமாக செயல்பட்டு வருவதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் ஒரு பகுதியாக, “இஸ்லாமிய நேட்டோ” போன்ற அமைப்பை உருவாக்கும் நீண்டகால திட்டத்தை அவர் முன்னெடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.
உலகில் அணு ஆயுதங்களை கொண்ட ஒரே இஸ்லாமிய நாடு என்ற அடையாளம் பாகிஸ்தானுக்கு உள்ளது. ஆனால் இந்தியாவிடமும், ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பிடமும் தொடர் பின்னடைவுகளை சந்தித்த பாகிஸ்தான் ராணுவத்தின் தற்போதைய தலைமை தளபதியாக அசிம் முனீர் செயல்பட்டு வருகிறார்.
‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் தோல்வியால் ஏற்பட்ட விமர்சனங்களை மறைக்கும் நோக்கில், அரசின் அழுத்தத்துடன் தன்னைத்தானே ஃபீல்ட் மார்ஷல் பதவிக்கு உயர்த்திக் கொண்டதாக அரசியல் விமர்சகர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, 27வது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் நாட்டின் உச்ச அதிகாரங்கள் பெரும்பாலும் ராணுவத் தலைமையிடம் குவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதற்காகவே “முப்படைகளின் தலைமைத் தளபதி” என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டு, பாகிஸ்தானின் மிக உயர்ந்த ராணுவ அதிகாரம் அசிம் முனீருக்கு வழங்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் தனது ஆயுத கையிருப்பின் பெரும்பகுதியை வெளிநாடுகளிலிருந்து பெறுகிறது. தற்போதைய நிலவரப்படி, சுமார் 81 சதவீத ஆயுதங்கள் சீனாவிலிருந்து, 5.5 சதவீதம் நெதர்லாந்திலிருந்து, 3.8 சதவீதம் துருக்கியில் இருந்து பெறப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சூழலில், இஸ்லாமிய நாடுகளுக்குப் பாதுகாப்பு ஆலோசனை, ராணுவ பயிற்சி, ஆயுத வழங்கல் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் புதிய பாதையை பாகிஸ்தான் தேர்வு செய்துள்ளது. பாதுகாப்பு ஆய்வாளர்கள் இதனை “பாதுகாப்பு ராஜதந்திரம்” என புதிய கோட்பாடாக விவரிக்கின்றனர்.
சவூதி அரேபியா, கத்தார், துருக்கி, லிபியா, வங்கதேசம் உள்ளிட்ட பல நாடுகளுடன், ராணுவ ஒத்துழைப்பு, ஆயுத கொள்முதல் மற்றும் பாதுகாப்பு உடன்படிக்கைகளை பாகிஸ்தான் விரிவுபடுத்தி வருகிறது.
மேற்கு ஆசியாவில் ஏமன், இஸ்ரேல்–பாலஸ்தீனம், ஈரான் ஆகிய பகுதிகளிலும், வட மற்றும் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளான லிபியா, சூடான், சோமாலியா போன்ற பகுதிகளிலும் நிலவும் போர் சூழல் மற்றும் அரசியல் குழப்பம், சவூதி அரேபியாவை பாகிஸ்தானுடன் நெருங்கச் செய்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், சவூதி அரேபியாவிடமிருந்து பெற்ற பெரும் கடன்களை திருப்பிச் செலுத்த முடியாமல் பாகிஸ்தான் திணறி வருகிறது. கடன் காலக்கெடு நெருங்கி வரும் நிலையில், சுமார் 3.7 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான JF-17 போர் விமானங்களை வழங்குவதன் மூலம் கடனை ஈடுசெய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கு முன்பாக இரு நாடுகளுக்கும் இடையே ‘Strategic Mutual Defence Agreement’ எனும் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதில் அணு ஆயுதங்கள் குறித்து நேரடியாக குறிப்பிடப்படவில்லை என்றாலும், செறிவூட்டப்பட்ட யுரேனியம் மற்றும் அணுசக்தி தொடர்பான மறைமுக பரிமாற்றங்கள் நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஐநா ஆயுதத் தடை விதித்துள்ள லிபியாவுடன் கூட, சுமார் 4 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மேற்கொண்டுள்ளது. இதில் 16 JF-17 போர் விமானங்கள் மற்றும் 12 Super Mushak பயிற்சி விமானங்கள் அடங்கும்.
கடந்த டிசம்பர் மாதம், வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் சந்தித்ததைத் தொடர்ந்து, வங்கதேச ராணுவத்திற்கு பயிற்சி வழங்கும் ஒப்பந்தமும் உறுதியாகியுள்ளது.
மேலும், JF-17 Block III போர் விமானங்களையும், ஆரம்ப நிலை பயிற்சிக்கான ‘சூப்பர் முஷாக்’ விமானங்களையும் வங்கதேசம் பாகிஸ்தானிடமிருந்து வாங்க முடிவு செய்துள்ளது. விமானிகள் பயிற்சி, பராமரிப்பு வசதிகள் மற்றும் ரேடார் அமைப்புகளை மேம்படுத்தும் பணிகளிலும் பாகிஸ்தான் ஈடுபட உள்ளது.
இதற்குப் பிறகும், சுமார் எட்டு இஸ்லாமிய நாடுகள் பாகிஸ்தானுடன் அதிகாரபூர்வமாகவும், சிலர் மறைமுகமாகவும் பாதுகாப்பு ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக அந்நாட்டு துணை பிரதமரும் வெளியுறவுத் துறை அமைச்சருமான இஷாக் டார் தெரிவித்துள்ளார்.
துருக்கி, அஜர்பைஜான், வங்கதேசம், லிபியா, சூடான், ஜோர்டான், எகிப்து உள்ளிட்ட நாடுகள் பாகிஸ்தான் ராணுவத்தின் தொழில்நுட்பம், ஆயுதங்கள் மற்றும் பயிற்சி ஆதரவை பெற பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
அஜர்பைஜானுடன் 4.6 பில்லியன் டாலர் மதிப்பிலான 40 JF-17 விமான ஒப்பந்தமும், சூடானுடன் 1.1 பில்லியன் டாலர் ஆயுத ஒப்பந்தமும் விரைவில் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பு நிதியாண்டில் மட்டும் சுமார் 8 பில்லியன் டாலர் மதிப்பிலான பாதுகாப்பு ஏற்றுமதி ஒப்பந்தங்களைப் பெற்றுள்ள பாகிஸ்தான், அடுத்த ஐந்து ஆண்டுகளில் இதை 20 பில்லியன் டாலராக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், இஸ்லாமிய நாடுகளை ஒருங்கிணைக்கும் “இஸ்லாமிய நேட்டோ” போன்ற அமைப்பை உருவாக்க அசிம் முனீர் முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுவது, இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு புதிய சவாலாக மாறக்கூடும் என பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.