30 ஆண்டுகளாக நீடித்த உத்தவ் தாக்கரே ஆதிக்கம் முடிவுக்கு வந்தது
மும்பை மாநகராட்சி பாஜக கட்டுப்பாட்டில்
மும்பை மாநகராட்சி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்து, 30 ஆண்டுகளுக்குப் பிறகு மாநகராட்சி நிர்வாகத்தை கைப்பற்றியுள்ளது.
உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கூட்டணி, மொத்தம் 227 வார்டுகளில் 77 வார்டுகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. இதன் மூலம், நீண்ட காலமாக மும்பை மாநகராட்சியை தன் அரசியல் கோட்டையாக வைத்திருந்த சிவசேனாவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இந்தத் தேர்தலில் பாஜக 89 வார்டுகளில் முன்னிலை வகித்து வருகிறது. அதே நேரத்தில், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 29 வார்டுகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி வெறும் 7 வார்டுகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.
மாநகராட்சியில் பெரும்பான்மை பெற தேவையான 114 இடங்களை பாஜக தலைமையிலான கூட்டணி எளிதாக கடந்துள்ளதால், மாநகராட்சி நிர்வாகம் பாஜக வசம் செல்லும் நிலை உறுதியானதாகியுள்ளது.
30 ஆண்டுகளாக மும்பை மாநகராட்சியில் ஆதிக்கம் செலுத்தி வந்த உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, இந்தத் தேர்தலில் கடும் அரசியல் சரிவை சந்தித்துள்ளது.