ஜம்மு–காஷ்மீரில் ஒரே வாரத்தில் 3 பாகிஸ்தான் ட்ரோன்கள் ஊடுருவல் – ராணுவம் தகவல்
ஜம்மு–காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே, கடந்த ஒரு வாரத்தில் மூன்று பாகிஸ்தான் ட்ரோன்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி பறக்க முயன்றதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
சம்பா மாவட்டத்தில் எல்லைப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள், இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற இரண்டு பாகிஸ்தான் ட்ரோன்களை கவனித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து உடனடியாக நடவடிக்கை எடுத்த ராணுவத்தினர், அந்த ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக கூறப்படுகிறது.
மேலும், கடந்த ஒருவார காலத்தில் மட்டும் மூன்று பாகிஸ்தான் ட்ரோன்கள் எல்லைப் பகுதிகளில் அத்துமீறி பறக்கவிடப்பட்டதாக ராணுவ தரப்பு குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது.
முன்னதாக, பாகிஸ்தான் தரப்பில் இருந்து மீண்டும் தாக்குதல் அல்லது எல்லை மீறல் சம்பவங்கள் நடைபெற்றால், அதற்கு கடுமையான பதிலடி வழங்கப்படும் என ராணுவத் தலைமைத் தளபதி உபேந்திர திவேதி எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்தச் சூழலில், சம்பா மாவட்டத்தில் மீண்டும் பாகிஸ்தான் ட்ரோன் பறந்த சம்பவம் பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.