அமெரிக்க அதிபர் டிரம்புக்கு நோபல் பரிசு வழங்கல்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை வெள்ளை மாளிகையில் சந்தித்த வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, தமக்கு கிடைத்த அமைதிக்கான நோபல் பரிசை அவருக்கு வழங்கினார்.
முன்னதாக, வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸும் அமெரிக்க ராணுவத்தால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, துணை அதிபராக இருந்த டெல்சி ரோட்ரிக்ஸ் தற்காலிக அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்த அரசியல் சூழ்நிலையில், வெனிசுலா எதிர்க்கட்சியின் முன்னணி தலைவரான மரியா கொரினா மச்சாடோ, அமெரிக்க அதிபர் டிரம்பை நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். அந்த சந்திப்பின்போது, தாம் பெற்ற அமைதிக்கான நோபல் பரிசை அவர் டிரம்பிடம் மரியாதையாக வழங்கினார்.
மேலும், வெனிசுலாவின் சுதந்திரம் மற்றும் ஜனநாயக மீட்பிற்காக அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆதரவை முழுமையாக நம்பியிருப்பதாக மரியா கொரினா மச்சாடோ வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், மரியா கொரினா மச்சாடோவை சந்தித்தது தமக்கு பெருமை அளித்ததாக அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். அவர் ஒரு சிறந்த மற்றும் உறுதியான பெண்மணி என பாராட்டிய டிரம்ப், தாம் மேற்கொண்ட பணிகளை பாராட்டும் விதமாக மரியா தனது அமைதிக்கான நோபல் பரிசை வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
இது பரஸ்பர மரியாதையும், மதிப்பீடும் வெளிப்படும் ஒரு சிறப்பான தருணம் எனவும் அதிபர் டிரம்ப் தனது பதிவில் கூறியுள்ளார்.