10.5 கிலோ தங்க ஆடை: கின்னஸ் சாதனை
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் உலகின் கனமான ஆடை அறிமுகமாகி, கண்ணைப் பறிமாறியுள்ளது.
10.5 கிலோ (24 காரட்) தங்கத்தில் உருவாக்கப்பட்ட இந்த ஆடையின் மதிப்பு ரூ.9.5 கோடி. அலங்கரிக்கப்பட்ட அரிய கற்கள், துபாயின் ஆடம்பரம், கைவினைத்திறன் மற்றும் உயர்தர ஆடைத் துறையில் புதுமை ஆகியவற்றை வெளிப்படுத்துகின்றன.
இந்த ஆடை உலகின் கனமான தங்க ஆடை என கின்னஸ் உலக சாதனைகள் அமைப்பு அங்கீகரித்துள்ளது. இதன் மூலம் துபாய், ஆடம்பர ஆடை மற்றும் தங்க கைவினைப் பொருட்களின் உலகளாவிய மையமாக திகழ்கிறது என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியது.
சவுதி அரேபியாவின் அல் ரோமைசான் கோல்டு நிறுவனம் வடிவமைத்த இந்த ஆடை, துபாயை அடுத்த ஷார்ஜாவில் நடைபெற்ற 56-வது மத்திய கிழக்கு வாட்ச் அண்ட் ஜுவல்லரி கண்காட்சியில் அறிமுகமாகியது.
பிரகாசமான தோற்றத்துடன், இந்த ஆடை மத்திய கிழக்கு நாடுகளின் நுணுக்கமான கலை வடிவமைப்பையும் பிரதிபலிக்கிறது. செழிப்பு, அழகு ஆகியவற்றை வெளிப்படுத்தும் வடிவங்கள் இதில் உள்ளன.
இந்த ஆடை வர்த்தக நோக்கத்திற்காக உருவாக்கப்படவில்லை; உலகம் முழுவதும் நடைபெறும் கண்காட்சிகள் மற்றும் ஆடம்பர நிகழ்ச்சிகளில் காட்சிப்படுத்தப்படும். எதிர்காலத்தில், ஐரோப்பா மற்றும் ஆசியாவின் முக்கிய ஆடை மற்றும் நகை கண்காட்சிகளில் இதன் காட்சி காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.